Last Updated : 29 Jan, 2020 06:12 PM

 

Published : 29 Jan 2020 06:12 PM
Last Updated : 29 Jan 2020 06:12 PM

முடிவு நெருங்குகிறது: நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் 'ஹேங்மேன்' திஹார் சிறைக்கு வியாழன் வருகை

திஹார் சிறை : கோப்புப்படம்

புதுடெல்லி

நிர்பயா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் 4 பேருக்கு தண்டனையை நிறைவேற்றும் ஹேங் மேன், திஹார் சிறைக்கு நாளை(வியாழக்கிழமை) வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றும் ஒத்திகை நிகழ்வும் சிறையில் நடந்து முடிந்துள்ளது. குற்றவாளிகள் 4 பேரின் உறவினர்கள், குடும்பத்தினர் அனைவரும் திஹார் சிறைக்கு வந்து சந்தித்துவிட்டுச் சென்றனர்.

திஹார் சிறையில் நிரந்தரமான ஹேங்மேன் யாரும் இல்லை என்பதால், டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவுடன், 4 பேரையும் யார் தூக்கிலிடப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்த 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான சரியான ஹேங்மேனையும் திஹார் சிறை நிர்வாகம் தேடி வந்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் இருந்து பவான் ஜலாத்துக்கு திஹார் சிறை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திஹார் சிறையின் இயக்குநர் சந்தீப் கோயல் நிருபர்களிடம் கூறுகையில், "குற்றவாளிகள் 4 பேருக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன் வியாழக்கிழமை திஹார் சிறைக்கு வருகிறார். மீரட் நகரில் இருந்து பவான் ஜலாத்தை அழைத்திருக்கிறோம். டெல்லி வந்தவுடன் சிறப்பு வாகனம் மூலம் பவான் ஜலாத் திஹார் சிறைக்கு அழைத்து வரப்படுவார்" எனத் தெரிவித்தார்.

திஹார் சிறையில் தூக்கிலிடுவதற்கான என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு, சிறை இயக்குநர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையே தூக்கு தண்டனையை நிறைவேற்ற வரும் பவான் ஜலாத்துக்குப் பாதுகாவலாக 15 முதல் 20 ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளிப்பார்கள். அவரைப் பாதுகாப்பாக போலீஸ் வாகனத்தில் அழைத்து வருவார்கள். மேலும், மீரட் நகரில் இருந்து எவ்வாறு பவான் ஜலாத் திஹார் சிறைக்கு வருகிறார் என்ற விவரத்தையும் போலீஸார் ரகசியமாக வைத்துள்ளார்கள்.

டெல்லி சிறப்பு போலீஸாருடன் சேர்ந்து, தமிழக சிறப்பு போலீஸாரும் சேர்ந்து மீரட் சென்று பவான் ஜலாத்தை அழைத்து வருவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x