

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சர்ச்சைக்குரிய புதிய மசோதா குறித்த ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 4 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு நடுவே, நிலம் கையக மசோதா குறித்து ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் எஸ்எஸ் அலுவாலியா (பாஜக), அறிக்கை தாக்கல் செய்வதற்கு வரும் 7-ம் தேதி வரை (4 நாட்கள்) கூடுதல் அவகாசம் கேட்டு தீர்மானம் தாக்கல் செய்தார். இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இந்த அவகாசம் போதுமானதாக இருக்காது என இக்குழுவில் இடம்பெற்றுள்ள சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். இந்த அறிக்கையை 9-ம் தேதி இறுதி செய்து, 10-ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தனர். அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஏற்கெனவே ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இது இன்றுடன் முடிந்த நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.