

பிப்ரவரி 20 வரை சீனாவுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய் பரவல் அச்சம் காரணமாக சீனாவின் குறிப்பிட்ட சில நகரங்களும் மாவட்டங்களும் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸின் கொடிய தாக்குதலினால் இதுவரை 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ள நிலையில், சீனாவில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் அடைபட்டுள்ளனர். வுஹான் நகரில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் மருத்துவ சிகிக்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து பிப்ரவரி 1 முதல் ஹாங்காங் உட்பட சீனாவுக்கான தனது இரண்டு விமான சேவைகளை நிறுத்தி வைப்பதாக இண்டிகோ விமான நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தற்போது, விமான நிறுவனம் சீனாவுக்கு நான்கு மற்றும் ஒரு விமானத்தை ஹாங்காங்கிற்கு இயக்குகிறது. இவை புது டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரை சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள இடங்களுடன் இணைக்கின்றன.
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''சீனாவின் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான விமானங்களை ரத்து செய்துள்ளோம். எனவே, பிப்ரவரி 1, 2020 முதல் பிப்ரவரி 20, 2020 வரை டெல்லி மற்றும் செங்டு இடையேயான எங்கள் விமானப் பயணங்கள் நடைபெறாது. பிப்ரவரி 1, 2020 முதல் அமல்படுத்தப்படும் எங்கள் பெங்களூரு - ஹாங்காங் விமானத்தையும் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம்.
இவை முற்றிலும் தற்காலிக மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நடவடிக்கைகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.
ரத்து செய்யப்பட்டுள்ள விமானப் பயணத்திற்காக முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையையும் திருப்பித் தருவோம். நாங்கள் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம், சீனாவில் உள்ள எங்கள் கூட்டாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் இதுவரை அளித்த அனைத்து உதவிகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி''.
இவ்வாறு இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.