

கேரள சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆரிஃப்கானை அவைக்குள் வரவிடாமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.
கூட்டத்தொடரில் உரையை வாசித்த ஆளுநர் ஆரிஃப்கான், சிஏஏ எதிர்ப்புக் குறித்த அரசின் தீர்மானத்தையும் வாசித்தார். ஆனால், வாசிக்கும் முன்பாக முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டதால் இந்த வாசகத்தை வாசிக்கிறேன். ஆனால், எனக்கு இதில் உடன்பாடில்லை, கடுமையாக எதிர்க்கிறேன் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு கேரள அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது.
ஆனால், ஆளுநர் முகமது ஆரிஃப்கான் கேரள அரசு தீர்மானம் கொண்டுவந்ததையும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையும் கடுமையாக எதிர்த்தார். கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் கேட்டார்.
இந்நிலையில் கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளான இன்று ஆளுநர் ஆரிஃப்கான் சட்டப்பேரவைக்கு வருகை வந்தார். அவரை முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் ஆகியோர் அழைத்து வந்தனர். ஆனால், ஆளுநரை அவைக்குள் நுழைய விடாமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கையில் பதாகைகளை ஏந்திப் போராட்டம் நடத்தினர்.
ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களைப் பார்த்துப் புன்னகை செய்து, அவர்களை மீறி ஆளுநர் சென்றார். அப்போது, ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
எம்எல்ஏக்களைச் சமாதானப்படுத்தி, ஆளுநருக்கு வழிவிடும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஆனால், எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, ஆளுநருக்கும், அரசுக்கும் எதிராகக் கோஷமிட்டனர்.
அடுத்த 10 நிமிடங்களில் அவைக்காவலர்கள் வந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஒதுக்கிவிட்டு, ஆளுநரை அழைத்துச் சென்றனர். ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கியவுடன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா எழுந்து பேசி இடையூறு செய்தார். தாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேறினர்.
அதன்பின் ஆளுநர் ஆரிஃப்கான் தனது உரையை வாசித்தார். அப்போது, 18-வது பத்தியை வாசிக்கும்போது, ஆளுநர் ஆரிஃப்கான் கூறுகையில், " நான் 18-வது பத்தியை வாசிக்கப் போகிறேன். 18-வது பத்தி என்பது குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரானது. முதல்வர் பினராயி விஜயன் இந்த 18-வது பத்தியை நான் வாசிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.
மாநில அமைச்சரவையின் பரிந்துரைகளை, ஆலோசனைகளை ஏற்க வேண்டியது ஆளுநரின் கடமை என்பதால் இதை வாசிக்கிறேன். ஆனால், இந்தப் பத்தியை வாசிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதிலிருந்து நான் வேறுபடுகிறேன்.
குடியுரிமை என்பதை மதத்தை அடிப்படையாக வைத்து வழங்கிடக் கூடாது. அது மதச்சார்பின்மைக்கு எதிரானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது" என்ற தீர்மானத்தை வாசித்தார்.