Published : 29 Jan 2020 04:48 PM
Last Updated : 29 Jan 2020 04:48 PM

தேசத்துரோக வழக்கில் ஷார்ஜில் இமாம் கைது: கன்னையாகுமார் கண்டனம்

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷார்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் கன்னையா குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறன. பாஜக சார்பில் குடியுரிமைச் சட்ட ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷார்ஜில் இமாமை பிஹார் மாநிலம் ஜகானாபாத்தில் டெல்லி போலீஸார் கைது செய்தனர். வட கிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் எனக் கூறி இவர் பேசிய வீடியோ பதிவு வெளியாகி வைரலானது.

இதன் அடிப்படையில் ஷார்ஜில் இமாம் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலும் தேடப்பட்டு வந்த ஷார்ஜில் இமாம் பிஹாரில் உள்ள ஜகானாபாத் மாவட்டத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து டெல்லி போலீஸார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் பேரவை முன்னாள் தலைவர் கன்னையா குமார் கூறியதாவது:
‘‘ஷார்ஜில் இமாமுக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடு உண்டு. வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் ஏற்க முடியாது. இதற்காக அவர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதேசமயம் அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் மக்கள் எதிர்த்து கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x