

பிஹார் முதல்வராக பதவியை தக்க வைத்துக் கொண்ட அவருக்கு எனது வாழ்த்துகள் என ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் பிரசாந்த் கிஷோருக்கும், பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவரான நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இதையடுத்து ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர் அலோக் வர்மா பிரசாந்த் கிஷோரை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில் ‘‘பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருக்க நினைத்தால் இருக்கலாம். அவர் கட்சியை விட்டுப் போக நினைத்தால் போகலாம். காங்கிரஸுக்கு ஆலோசனை கூறுகிறார்.
பின்னர் ஆம் ஆத்மிக்கு ஆலோசனை வழங்குகிறார். மம்தா பானர்ஜி வெற்றிக்கு உழைக்கிறார். இவரை யார் நம்புவார்கள். கரோனா வைரஸ் விரைவில் எங்களை விட்டு அகலும்’’ எனக் கூறியிருந்தார். இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘‘நிதிஷ் குமாருக்கு நன்றி, பிஹார் முதல்வராகப் பதவியைத் தக்க வைத்துக் கொண்ட அவருக்கு எனது வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு அருளட்டும்’’ எனக் கூறினார்.