

பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் துணைத் தலைவருமான பிரசாந்த் கிஷோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார்.
பின்னர் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய அவரது வியூகம் வெற்றி பெறவில்லை. இதனால், அவர் அரசியல் சார்ந்த பணிகள் எதிலும் ஈடுபடாமல் இருந்தார்.
பின்னர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். அவருக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்தநிலையில் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் பிரசாந்த் கிஷோருக்கும், பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவரான நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இதையடுத்து ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர் அலோக் வர்மா பிரசாந்த் கிஷோரை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில் ‘‘பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருக்க நினைத்தால் இருக்கலாம்.
அவர் கட்சியை விட்டு போக நினைத்தால் போகலாம். காங்கிரஸூக்கு ஆலோசனை கூறுகிறார். பின்னர் ஆம் ஆத்மி ஆலோசனை வழங்குகிறார். மம்தா பானர்ஜி வெற்றிக்கு உழைக்கிறார். இவரை யார் நம்புவார்கள். கரோனா வைரஸ் விரைவில் எங்களை விட்டு அகலும்’’ எனக் கூறியிருந்தார். இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளாரர்.