

பட்ஜெட்டுக்கு சில தினங்களே உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இன்னும் சில தினங்களே உள்ளன. 2020-21 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று ட்விட்டரில் கூறுகையில், ''மோடியும் அவரது பொருளாதார ஆலோசகர்களின் கனவுக் குழுவும் உண்மையில் பொருளாதாரத்தை நோக்கித் திரும்பியுள்ளனர். முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5%. பணவீக்கம் 3.5%. இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5%. பணவீக்கம் 7.5%. பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.