Last Updated : 29 Jan, 2020 12:12 PM

 

Published : 29 Jan 2020 12:12 PM
Last Updated : 29 Jan 2020 12:12 PM

ஆட்டோ - பேருந்து மோதி கிணற்றில் விழுந்த விபத்தில் 26 பயணிகள் பலி: மகாராஷ்டிராவில் சோகம்; பிரதமர் மோடி இரங்கல்

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் ஆட்டோவும், அரசுப் பேருந்தும் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்டு சாலையோரக் கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் 9 பெண்கள் உள்பட 26 பேர் பலியாயினர்.

நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான்-தியோலா சாலையில் இந்த பயங்கர விபத்து நேற்று மாலை நடந்தது. நாசிக் மாவட்டத்தின் கல்வான் நகரில் இருந்து துலே மாவட்டத்துக்கு அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்றது. அப்போது, எதிரே பயணிகளுடன் ஆட்டோ ஒன்றும் வந்தது. இரு வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக் கொண்டன.

மோதிய வேகத்தில் பேருந்தின் கீழ் ஆட்டோ சிக்கிக் கொண்டது. பேருந்து வேகம் தாளாமல் சாலை ஓரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.

நாசிக் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்த்தி சிங் கூறுகையில், " பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 7 வயது சிறுமி உள்பட 9 பெண்களும் அடக்கம். 18-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர்

கிணற்றுக்குள் யாரேனும் சிக்கி இருக்கலாம் எனக் கருதி, கிணற்று நீர் முழுவதையும் இறைக்கும் பணியில் இருக்கிறோம். மீட்புப் பணியில் தீத்தடுப்புப் படையினர், போலீஸார் உள்ளூர் மக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே விபத்தில் பலியான 26 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், "கல்யாண் பணிமனையைச் சேர்ந்த பேருந்தின் ஓட்டுநர் பி.எஸ். பச்சாவ்தான் விபத்துக்கான காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளுக்குத் தேவையான முதல் தரமான மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், " மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் நடந்த விபத்து மிகவும் துயரமானது, எனக்கு வேதனையளிக்கிறது. சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x