Last Updated : 29 Jan, 2020 10:59 AM

 

Published : 29 Jan 2020 10:59 AM
Last Updated : 29 Jan 2020 10:59 AM

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

2012-ம் ஆண்டில் டெல்லியில் நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் உச்ச நீதிமன்றத்தில் தனது தண்டனையை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கெனவே குற்றவாளிகளில் 4 பேரில் வினய் குமார், முகேஷ் சிங் ஆகியோரின் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் மூன்றாவதாக அக்சய் குமார் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17-ம் தேதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதில் குற்றவாளிகள் வினய் குமார், முகேஷ் சிங் ஆகியோர் ஏற்கெனவே தங்களின் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், மற்றொரு குற்றவாளியான அக்சய் குமார் இன்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். வரும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் சூழலில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து குற்றவாளி அக்சய் குமாரின் வழக்கறிஞர் ஏபி சிங் நிருபர்களிடம் கூறுகையில், "குற்றவாளி அக்சய் குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றப் பதிவாளர் சில ஆவணங்கள் கேட்டுள்ளார். அந்த ஆவணங்களை அளிக்க இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x