Published : 29 Jan 2020 10:33 AM
Last Updated : 29 Jan 2020 10:33 AM

இன்று இந்திய நாளேடுகள் தினம்!

காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்
பிறந்த பத்திரிகைப் பெண்ணே…

என பாவேந்தர் பாரதிதாசனார் பத்திரிகைகளைப் புகழ்ந்து பாடினார்.

தொழில்நுட்ப வளர்ச்சி என்னதான் இன்று வளர்ந்து, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகங்கள் வாயிலாகவும், செல்போன், லேப்டாப் என தொழில்நுட்பக் கருவிகள் வாயிலாகவும் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஒருசேரப் பார்க்க முடியும் என்றாலும், காலைப் பொழுதில் செய்தித்தாள் படிப்பதுடன் அன்றைய நாளைத் தொடங்குவது என்பது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் பழக்கமாக இருக்கிறது.

வீட்டில் அமர்ந்து சூடான காபி குடித்துக் கொண்டு நாளேடுகளைப் புரட்டுவதும், தேநீர் கடையில் அமர்ந்து கொண்டு தேநீர் குடித்துக்கொண்டு நாளேட்டைப் பார்த்து உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை பேசுவதும் நாளேடுகள் இருந்தால் மட்டுமே முடியும். மக்களின் மனதோடு நெருக்கமானது, அலாதி சுகம் தரக்கூடியது செய்தித்தாள்.

நம் அண்டை வீட்டுச் செய்தியிலிருந்து ஆயிரம் கல் தொலைவிலுள்ள நாடுகள், விண்வெளிக் கோளங்கள் ஆகியவற்றில் நிகழும் அதிசயச் செய்தி வரை நம்மிடம் கூறும் நண்பன் செய்தித்தாள். அதனால்தான் நாம் தினமும் அதன் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை நம் நாட்டில் முதன்முதலாக ஹிக்கீஸ் பெங்கால் கெஜெட் (Hicky Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ என்பவர் 1780 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி வெளியிட்டார். இதனால்தான் இந்தியாவில் வெளிவந்த முதல் வார இதழ் என்பதால் அத்தினத்தை இந்திய செய்தித்தாள் தினமாக கொண்டாடுகிறோம்.

ஏறக்குறைய 240 ஆண்டுகளில் இந்தியாவில் நாளேடுகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. ஏராளமான பரிணாம மாற்றங்களும் அடைந்திருக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாளேடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தகவல் சாதனங்களைப் பொறுத்தவரையில் உள்ளடக்கத்தில் ஓரளவு வெளிநாடுகளையே பின்பற்றி வந்தாலும், அதன் பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சற்று கூர்மையாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது. சுதந்திரத் தீயை மூட்டுவனவாக பத்திரிகைகள் இருந்தன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பல பத்திரிகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. ஏராளமானவை அரசின் நெருக்கடியால் நின்று போயின. ஆயினும், அவை மூட்டிய தீ மக்களிடம் போய்ச் சேர்ந்து பெருந்தீயாக விஸ்வரூபம் எடுத்தது.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் இருண்ட ஆட்சியின்போது, ராஜாராம் மோகன் ராய் நடத்திய சம்பத் கவுமுதி, லோகமான்ய திலகர் நடத்திய கேசரி, மகாத்மா காந்தி நடத்தி வந்த நவஜீவன் ஆகிய பத்திரிகைகள் மக்களுக்குக் கலங்கரை விளக்கங்களாக இருந்தன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தன. தங்கள் வாழ்க்கை வசதிகளைத் துறந்து பல பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் வாழ்ந்தனர். அவர்கள் தங்களது செய்தித்தாள்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சுதந்திரப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய பல செய்தித்தாள்கள் இந்திய மொழிகளில்தான் வெளியாகியிருக்கின்றன. உண்மையில் சொல்லப்போனால், ஆங்கிலேய அரசாங்கம் இந்திய மொழி இதழ்களைப் பார்த்துதான் அச்சமடைந்தன. அதனால், இந்திய பிராந்திய மொழிச் செய்தித்தாள்களின் கழுத்தை நெரிப்பதற்காக மொழிச் செய்தித்தாள்கள் சட்டம் 1878-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

அந்த முன்னோடிகளின் உயர்ந்த லட்சியங்களின் காரணமாகத்தான் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பல செய்தித்தாள்கள் இன்றும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

பன்முகத் தன்மை கொண்ட நம் நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் செய்தித்தாள்கள் மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் மொழியில் செய்திகளை வெளியிடுகின்றன. எளிய மக்களுக்கும்,படித்தவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், வலிமையில்லாத பிரிவினருக்கும் தேவையான தகவல்களைக் கொண்டு சேர்க்கின்றன.

செய்தித்தாள்களின் வலிமை, தாக்கம், பொறுப்புணர்வு ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிட முடியாது. மூலை முடுக்குகளுக்கும் அரசின் கொள்கைகள், குறிக்கோள்களை எடுத்துச் செல்லும் தூதர்களாகவும் அவை இருக்கின்றன. அதைப் போல மக்களின் எண்ணங்கள், உணர்வுகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும் இருக்கின்றன.

மனிதகுலத்தின் அறிவுத் தேடல் மிகப் பழமையானது. அந்தத் தாகத்தைத் தணிக்க பத்திரிகைத் துறைதான் துணை புரிகிறது. இன்று, செய்தித்தாள்கள் வெறும் செய்திகளை மட்டும் தந்துவிடுவதில்லை. நமது சிந்தனையைச் செதுக்கி, உலகைப் பார்ப்பதற்கான ஜன்னலைத் திறந்துவிடுகின்றன. ஊடகம் என்பது சமுதாயத்தை மாற்றும் வழியாகும்.

அதனால்தான், ஊடகத்தை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறுகிறோம். பேனாவின் ஆற்றல், ஈட்டிமுனையைக் காட்டிலும் வலிமையானது எனக் கூறுகிறார்கள்.

பத்திரிகைகளுக்கு ஏராளமான சமூகப் பொறுப்பு இருக்கிறது. அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சுதந்திரம் மக்கள் நலனுக்காக புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அதே சமயம் எழுத்துரிமையோடு எதை எழுதவேண்டும் என்று முடிவெடுப்பதும் துல்லியம் இல்லாததையோ எழுதுவதும் சுதந்திரம் ஆகாது.

மகாத்மா காந்தி, “பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படுகிறது. அது சக்தி மிக்கது என்பது நிச்சயம். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்துவது குற்றமாகும்” எனத் தெரிவித்துள்ளார்

ஊடகங்கள் தனியாருக்குச் சொந்தமானவை என்றபோதும், அவை மக்களுக்குச் சேவையாற்றுகின்றன. அமைதியாக சீர்திருத்தம் கொண்டுவருவதற்கான தூண்டுகோலாகச் செயல்படுகின்றன.

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையோ, நீதித்துறையை போல பத்திரிகைகும் சமூகக் கடமை இருக்கிறது. அதன் செயல்பாடும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x