

ராமேசுவரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக் கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நேற்று புனித நீராடினர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் தின் எட்டாம் நாளான நேற்று அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் ராமர், சீதா, லட்சுமணர் காலை 6 மணி அளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் எழுந்தருளி பக்தர் களுக்கு தீர்த்தவாரி வழங்கினர்.
பின்னர் அக்னி தீர்த்தக் கடலில் ஒரு லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடினர். நான்கு ரதவீதிகளில் பல மணி நேரங்கள் காத்திருந்து கோயிலுக்கு உள்ளே இருக்கும் 22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர்.
போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். பக்தர்கள் கூட்டம் காரணமாக தங்கும் விடுதிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை-ராமேசுவரம் மார்க்கத்தில் சிறப்பு ரயிலும், ராமேசுவரம் வரும் பயணிகள் ரயில்களில் கூடுதலாக இரண்டு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன. மேலும் திருச்சி, மதுரை மார்க்கத்தில் சிறப்பு அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை, தேவிப் பட்டினம் மற்றும் வைகை நதி நீர்நிலைகளிலும் ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.