Published : 29 Jan 2020 08:17 AM
Last Updated : 29 Jan 2020 08:17 AM

கேரளாவில் மணப்பெண்ணின் விருப்பப்படி 100 புத்தகம் பரிசாக கொடுத்து மணம் செய்த இளைஞர்

மணப்பெண் கேட்ட100 புத்தகங்களை திருமணப் பரிசாக கொடுத்து கேரள முஸ்லிம் இளைஞர் திருமணம் செய்த செய்தி உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இஜாஸ் ஹக்கிம். இவர் பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பயணப்படுபவர், கதை சொல்லி, சமூகச் செயற்பாட்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

அண்மையில் அதே கொல்லம் பகுதியைச் சேர்ந்த அஜ்னா நசீம் என்ற பெண்ணை திருமணம் செய்தார் இஜாஸ்.

திருமணத்தின்போது மணமுடிக்கும் பெண்ணுக்கு மெஹர் (வரதட்சணை) கொடுப்பது முஸ்லிம்கள் திருமணத்தில் உள்ள நடைமுறையாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி இவர்களுக்கு கொல்லம் பகுதியில் திருமணம் நடைபெற்றது. நிச்சயத்தின்போது, தான் கூறும் 100 புத்தகங்களை பரிசாகத் தரவேண்டும் என்று இஜாஸ் ஹக்கிமிடம், மணப்பெண் அஜ்னா நசீம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அஜ்னா கேட்ட அனைத்து புத்தகங்களையும் தேடிப்பிடித்து வாங்கி திருமணத்தின்போது அஜ்னாவிடம் கொடுத்து அவரை கைப்பிடித்திருக்கிறார் இஜாஸ் ஹக்கிம்.

இந்தத் தகவலை பேஸ்புக் பக்கத்தில் இஜாஸ் ஹக்கிம் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுதான் தற்போது வைரலாகியுள்ளது. பக்கத்தில் மனைவிக்கு புத்தகங்கள் பரிசளிக்கும் படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இஜாஸ் ஹக்கிம் கூறும்போது, “அஜ்னா என்னிடம் 80 புத்தகங்கள்தான் கேட்டார். நான் மேலும் 20 புத்தகங்களைச் சேர்த்து 100 புத்தகங்களாகக் கொடுத்தேன். இதில் பைபிள், குரான், பகவத் கீதை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்டவையும் அடங்கும். அவர் கேட்ட பரிசு எனக்கு பிடித்திருந்தது. அறிவைவிட மீறிய சக்தி எதுவும் கிடையாது. அஜ்னா ஒரு வித்தியாசமான, அறிவார்ந்த பெண். அவருக்கு எனது வாழ்த்துக் கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x