Last Updated : 28 Jan, 2020 09:26 PM

 

Published : 28 Jan 2020 09:26 PM
Last Updated : 28 Jan 2020 09:26 PM

டெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து; தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் : கோப்புப்படம்

புதுடெல்லி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததையடுத்து, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. வரும் 30-ம் தேதி நண்பகல் 1 மணிக்குள் அனுராக் தாக்கூர் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் தங்களின் 5 ஆண்டு கால சாதனைகளையும், திட்டங்களையும், அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்களையும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார். பாஜக, டெல்லியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், அரவிந்த் கேஜ்ரிவாலின் நிர்வாகச் சீர்கேட்டையும் குறை கூறி பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி ரிதாலா தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பிரச்சாரம் செய்தார். அப்போது, நாட்டுக்குத் துரோகம் செய்பவர்களை என்ன செய்யலாம் என்று கேட்ட கேள்விக்குச் சுட்டுத் தள்ளலாம் (கோலி மாரோ) என்று மக்களிடம் பதில் பெறும் வகையில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வீடியோ ஆதாரங்களையும் காங்கிரஸ் அளித்தது. மேலும், அனுராக் தாக்கூரின் பேச்சு, மக்களிடையே வேறுபாட்டையும், பிளவையும் உருவாக்கும் பேச்சாகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறுகையில், "ஒவ்வொரு நாள் கடக்கும் போதும், பாஜகவின் பேச்சு அனைத்தும் கடந்த 1930-களில் ஜெர்மனியை நினைவுபடுத்துகிறது. இனிமேலாவது தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?" எனக் கேட்டுள்ளார்.

இதையடுத்து தேர்தல் ஆணையத் தலைமை அதிகாரி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து ஜனவரி 30-ம் தேதி நண்பகல் 12 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x