பிரதமர் மோடிக்குப் பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லை; தேசத்தின் நற்பெயருக்குக் களங்கம்: ராகுல் காந்தி சாடல்

ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பேசிய காட்சி : படம் | ஏஎன்ஐ.
ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பேசிய காட்சி : படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

அமைதிக்கும், ஒற்றுமைக்கும் உதாரணமாகத் திகழும் இந்தியாவின் நற்பெயருக்கு சர்வதேச அளவில் பிரதமர் மோடி அரசு களங்கம் தேடித் தந்துள்ளது. பொருளாதாரம் குறித்த புரிதல் பிரதமருக்கு இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யுவ ஆக்ரோஷ் எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடிக்குப் பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பின்பற்றப்பட்ட பொருளாதார மதிப்பீடுகள் மீது கணக்கிட்டால் இப்போதுள்ள பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதம்தான் இருக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தேசத்தின் பொருளாதாரம் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. ஒட்டுமொத்த உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்த்தது. ஆனால், இன்று நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிட வித்தியாசமான கணக்கீடுகளை வைத்தும் 5 சதவீதம்தான் வளர்ந்துள்ளது. பழைய மதிப்பீட்டின்படி கணக்கிட்டால் 2.5 சதவீதம்தான்.

பிரதமர் மோடி பொருளாதரம் குறித்துப் படிக்கவும் இல்லை. அவருக்குப் புரிதலும் இல்லை. பொருளாதாரத்தைச் சரிவுக்குக் கொண்டு செல்லும் விதத்திலேயே அரசு செயல்படுகிறது.

பிரதமர் மோடிக்கு ஜிஎஸ்டி வரி குறித்துக்கூடப் புரிதல் இல்லை. 8 வயதுச் சிறுமியிடம் பண மதிப்பிழப்பால் பாதிப்பா என்றால் பாதிப்பு என்று கூறிவிடுவார்.

சர்வதேச அளவில் தேசத்தின் நற்பெயருக்கு இந்த அரசால் களங்கம் ஏற்படுவதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.

கடந்த ஓராண்டில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது. ஆனால், 2 கோடி பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார்.

இளைஞர்களின் குரல்களை அடக்க நடக்கும் முயற்சிகளில் பணிந்துவிடாமல், வேலைவாய்ப்பு குறித்து அரசிடம் கேள்வி கேட்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும்.

அமைதிக்கும், ஒற்றுமைக்கும் உதாரணமாக இந்தியா திகழ்கிறது. ஆனால், இப்போது இந்தியாவின் தோற்றத்தையும், மதிப்பையும் பிரதமர் மோடி சீரழித்துவிட்டார். பாலியல் பலாத்காரங்களின் தலைநகராக இந்தியா மாறிவிட்டது. ஆனால், இதுகுறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை

வேலைவாய்ப்பு குறித்தும், இந்தியாவின் தோற்றத்தைச் சிதைத்தது குறித்தும் இளைஞர்கள் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினால், அவர்களுக்குத் துப்பாக்கி குண்டுகள் மூலம் பதில் அளிக்கிறார்கள்.

இந்தியாவின் வலிமை இளைஞர்கள்தான். இவர்கள்தான் வலிமையான சீனாவுடன் போட்டியிட முடியும். மிகப்பெரிய சொத்தான இளைஞர்கள் சக்தியை மத்திய அரசு வீணாக்குகிறது''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in