Last Updated : 28 Jan, 2020 03:21 PM

 

Published : 28 Jan 2020 03:21 PM
Last Updated : 28 Jan 2020 03:21 PM

வரலாற்று அநீதிகளைச் சரிசெய்யவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது: பிரதமர் மோடி பேச்சு

வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரி செய்யவும், பழமையான வாக்குறுதியை நிறைவேற்றவும்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.

இது தவிர காஷ்மீர் விவகாரம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த சூழலில் டெல்லியில் இன்று நடந்த தேசிய மாணவர் படையின்(என்சிசி) ஆண்டுப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜம்மு காஷ்மீரில் பிரச்சினை நீடித்து வருகிறது. அரசியலில் உள்ள சில குடும்பங்களும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து இந்த விவகாரத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து அதைத் தீர்க்க முனைப்பு காட்டவில்லை. இதனால் அங்கு தீவிரவாதமும் வளர்ந்தது.

ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றது.

அண்டை நாடான பாகிஸ்தான் நம்முடன் நடந்த மூன்று போரில் தோல்வி அடைந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன்பு இருந்த அரசுகள் இதைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே பார்த்தன. ஆனால் இதற்குப் பதிலடி கொடுக்க நமது ராணுவத்தினர் கேட்டபோது, அவர்களை முன்னோக்கிச் செல்ல அனுமதி கொடுக்கவில்லை

தற்போது ஜம்மு காஷ்மீர் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான சூழலை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. பல பத்தாண்டுகளாக வடகிழக்கு மக்களின் அபிலாஷைகள், எண்ணங்களை பேச்சுவார்த்தையின் மூலம் இந்த அரசு தீர்த்து வைத்துள்ளது.

போடோ ஒப்பந்தம், முத்தலாக் தடை, ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாதனைகளை இந்த அரசு செய்துள்ளது.

வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அண்டை நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மக்களைக் காக்க வேண்டும் என்ற அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.

சுதந்திரத்துக்கு முன் நாட்டின் பிரிவினையின்போது அநீதி இழைக்கப்பட்டது. நேரு-லியாகத் இடையே நடந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது. இதை மகாத்மா காந்தியும் விரும்பினார். அந்த அடிப்படையில் சிறுபான்மையினரைக் காக்கும் வகையில்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்.

ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பேசும் சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலோடு செயல்படுகின்றன.

அண்டை நாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு நடக்கும் அநீதிகளை ஏன் அவர்கள் கவனிக்கவில்லை? ஏன் அதைப் புறம் தள்ளுகிறார்கள்? அதற்கு அவர்கள் பதில் அளிக்கவேண்டும். சிலர் தலித்துகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள் பாகிஸ்தானில் உள்ள தலித்துகள் பாதிக்கப்பட்டபோது ஏன் பேசவில்லை. பாகிஸ்தானில் மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு அடைக்கலமாக வந்தவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்தானே.

நம்முடைய அரசின் முடிவுகள் குறித்துப் பரப்பி விடப்படும் தவறான பிரச்சாரத்தால் உலகில் தேசத்தின் மதிப்புக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், நான் என்னுடைய கவுரவத்துக்காக உழைக்கவில்லை. தேசத்தின் கவுரவத்துக்காக உழைக்கிறேன்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x