

உத்தரபிரதேசத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பி.தினேஷ்குமாருக்கு குடியரசு தின பாராட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிவோருக்கு, குடியரசு தினத்தில் மத்திய அரசு சார்பில் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது. இதுபோன்ற விருதுகள் மாநில அரசுகள் சார்பிலும் தனியாக வழங்கப்படுகின்றன. அதன்படி, உத்தரபிரதேசத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான தினேஷ்குமாருக்கு அம்மாநில அரசு தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.
உ.பி.யின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள சஹரான்பூர் மதக் கலவரம் மற்றும் குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாவட்டமாகக் கருதப்படுகிறது. ஆனால், தினேஷ்குமார் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பிறகு, அங்கு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால் குற்றச் செயல்கள் குறைந்தன.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உ.பி. முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலவரம் மற்றும் பொதுமக்கள், போலீஸார் இடையே மோதலும் ஏற்பட்டு வருகிறது. இதில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், சஹரான்பூரில் மட்டும் போராட்டம் அமைதியாக நடைபெறுகிறது.
இதற்கு தினேஷ்குமாரின் நடவடிக்கைதான் காரணம். இந்து-முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் நேராமல் அமைதியான முறையில் போராட்டம் தொடர்கிறது. இந்த செயலை பாரட்டி தினேஷ்குமாருக்கு உ.பி. அரசு தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரியான தினேஷ்குமார் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “இந்த தங்கப் பதக்கத்தை எங்கள் மாவட்ட காவல் துறையினர் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில், அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த பதக்கம் கிடைத்திருக்காது” என்றார்.
சஹரான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாநில ஆயுஷ் துறை அமைச்சர் தரம்சிங் செய்னி இந்த பாராட்டு விருதை தினேஷ்குமாருக்கு வழங்கினார்.
2009-ம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வென்று உ.பியின் ஐபிஎஸ் அதிகாரியான தினேஷ்குமார், கோவையின் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்.