

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியோருக்கு, கேரளாவைச் சேர்ந்த பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பிடமிருந்து நிதி வந்துள்ளதாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உ.பி.யில் தொடர்ச்சியாக குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ சட்டம்) கடந்த 2018-ம் ஆண்டு முதல் பிஎப்ஐ அமைப்பு குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது 2018 முதல் பிஎப்ஐ அமைப்புக்கு ரூ.120 கோடி வரை உ.பி.யிலுள்ள பல்வேறு வங்கி களில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேற்கு உத்தரபிரதேசத்திலுள்ள பல்வேறு வங்கிகளில் இந்த நிதி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் பெயரில் இந்தப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்தும் இந்த நிதி உ.பி.க்கு வந்து சேர்ந்துள்ளது.
உ.பி.யின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பிஎப்ஐ சார்பில் இந்தப் பணம் தரப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு சந்தேகம் எழுப்பியுள்ளது.
இதையடுத்து பிஎப்ஐ அமைப்புக்கும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோருக்கும் நிதி பரிவர்த்தனை நடந்திருப்பதாக அமலாக்கப் பிரிவு சந்தேகம் எழுப்பியுள்ளது.
மேலும் பிஎப்ஐ சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் கபில் சிபல், துஷ்யந்த் தவே, இந்திரா ஜெய்சிங் ஆகியோருக்கு பணம் வழங்கப்பட்டதாகவும், அது குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு வழங்கப்பட்ட பணம்தான் என்றும் சில ஊடங்களில் செய்திகள் வெளியாயின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிஎப்ஐ-யின் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர்.
இதனிடையே அண்மையில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிஎப்ஐ அமைப்பை தடை செய்யவேண்டும் என்று அந்த மாநில போலீஸார் உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பிஎப்ஐ அமைப்பு உதவி வருகிறது என்றும் அவர்கள் அப்போது அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பிஎப்ஐ மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்குப் பதிவு செய்யவும் தேவையான பணிகளை அமலாக்கத்துறை செய்து வருகிறது. இதற்காக தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) முதல் தகவல் அறிக்கையையும், குற்றப்பத்திரிகையையும் பெறுவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக உ.பி.யில் நடந்த பல்வேறு போராட்டங்களின்போது 20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பிஎப்ஐ மறுப்பு
ஆனால் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு நிதி வழங்கப்பட்டதாகக் கூறுவதை பிஎப்ஐ மறுத்துள்ளது. வழக்கறிஞர்களுக்கு பணம் வழங்கப்பட்டது உண்மைதான். ஆனால் 2017-ல் ஹாடியா வழக்குக்காக வழங்கப்பட்ட பணம்தான் அது என்று பிஎப்ஐ தெரிவித்துள்ளது.
அதைப் போலவே காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞரு மான கபில் சிபல், வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆகியோரும் இந்தச் செய்தியை மறுத்துள்ளனர்.- பிடிஐ