Published : 28 Jan 2020 07:29 AM
Last Updated : 28 Jan 2020 07:29 AM

ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவிய பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது

கர்நாடகாவைச் சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பா.

பெங்களூரு

கர்நாடகாவில் தனது கிராமத்தில் ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்த ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

கர்நாடகாவில் தட்சிண கன்னடா பகுதியைச் சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பா. இவர் நியூபடப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிக்கூடமே இல்லாத இந்த கிராமத்தில் உள்ளஏழைக்குழந்தைகள் படிப்புக்காக தனது சொற்ப வருமானத்தில் இருந்து சிறிது சிறிதாக பணம் சேர்த்தும் கடன் வாங்கியும் பள்ளிக்கான நிலத்தை வாங்கினார். 2000-ம் ஆண்டில்தான் முதல்முறையாக அந்த கிராமத்தில் ஹஜப்பாவின் முயற்சியால் பள்ளி அமைக்கப்பட்டது. இதில் பல ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடர்ந்து ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு இவர் உதவி வருகிறார். ஏழ்மையான நிலையிலும் இவர் செய்துவரும் சேவையைப் பாரட்டி மத்திய அரசு ஹஜப்பாவுக்கு பத்ம விருது வழங்கியுள்ளது.

ஹஜப்பா பள்ளி சென்று படிக்காதவர். ஒருமுறை இவர் ஆரஞ்சுபழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி இவரிடம் பழத்தின் விலையைக் கேட்டடுள்ளனர். இவருக்கு துளு தவிர வேறு மொழி தெரியாததால் பதில் சொல்ல முடியவில்லை.. அந்த தம்பதி இவரிடம் பழம் வாங்காமல் சென்றுவிட்டனர். அப்போது முதல் தனது கிராமத்துப் பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதாக ஹஜப்பா கூறுகிறார்.

பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் கடையில் வரிசையில்ஹஜப்பா நின்று நின்றுகொண்டிருந்தபோது, அவருக்கு பத்ம விருது கிடைத்திருப்பதை அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். ஹஜப்பா பற்றிய விவரங்களை கர்னாடகாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு சுமார் 6,000 லைக்குகள் கிடைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x