Last Updated : 27 Jan, 2020 08:55 PM

 

Published : 27 Jan 2020 08:55 PM
Last Updated : 27 Jan 2020 08:55 PM

ஆந்திரப் பிரதேச சட்டமேலவையைக் கலைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: தெலுங்குதேச எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

ஆந்திரப் பிரதேச மாநில சட்டமேலவையைக் கலைக்கும் தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.

ஆந்திரச் சட்டப்பேரவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அசுரப் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், 58 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையில் ஒய்எஸ்ஆர் கட்சி 9 உறுப்பினர்களுடன் சிறுபான்மையாகவும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மேலவையில் 28 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையாகவும் இருக்கிறது.

தெலங்குதேசம் கட்சியின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 2021-ம் ஆண்டுதான் முடிவதால், ஆளும் கட்சி கொண்டுவரும் பெரும்பாலான மசோதாக்களுக்கு மேலவை அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் உருவாக்கும் மசோதாவைச் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து அதை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. ஆனால் சட்டமேலவைக்கு அந்த மசோதா அனுப்பப்பட்ட போது, அந்த மசோதா நிறைவேறாமல் தோல்வி அடைந்தது.

ஆந்திர சட்டப்பேரவை மேலவை தலைவர் எம்ஏ.ஷெரீப், 3 தலைநகரங்களை உருவாக்கும் இரு மசோதா, மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தையும் ஆங்கில வழிக்கல்வியாக மாற்றும் மசோதா ஆகியவற்றை மேலவை திருப்பி அனுப்பியது. இதில் தலைநகரங்களை மாற்றும் மசோதாக்களைச் சிறப்புக் குழுவுக்குப் பரிசீலனைக்கு அனுப்பி மேலவை தலைவர் உத்தரவிட்டார்.

சட்டமேலவையின் இந்த செயலால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மிகுந்த அதிருப்தியில் இருந்த அவர் " மாநிலத்துக்கு சட்டமேலவை தேவையா என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியது இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கூடிய ஆந்திர அமைச்சரவை சட்டமேலவையைக் கலைக்க இன்று ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் சட்டமேலவையை கலைக்கும் தீர்மானம் என்று சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 175 உறுப்பினர்களில் 133 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மாலை 6 மணிக்கு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது இதில் 133 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால் அரசியலமைப்புப் பிரிவு 169(1)ன்கீழ் தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் சீதாராமன் அறிவித்தார்.

இந்த தீர்மானம் இனி மத்திய அரசுக்கும், குடியுரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன், சட்டமேலவை கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x