

அசாமில் வசிக்கும் போடோ மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக இன்று செய்யப்பட்ட ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் வசிக்கும் போடா பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி என்டிஎப்பி எனப்படும் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி நீண்டகாலமாக ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தி வருகிறது. பழங்குடியின போடோ மக்களுக்கு போடோலாந்து தனி மாநிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அமைப்பு முன்வைத்து வருகிறது.
இந்தநிலையில் அந்த அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு இன்று சமாதான உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால், என்டிஎப்பி அமைப்பின் முக்கிய நான்கு தலைவா்கள், அஸ்ஸாம் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
போடோ பழங்குடியினருக்கு அரசியல் மற்றும் பொருளாதார சலுகைகளை வழங்கிட இந்த உடன்படிக்கையில் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அஸ்ஸாமில் வாழும் போடோ பழங்குடியின சமூகத்துக்கு அரசியல் உரிமையும், பொருளாதார சலுகைகளும் கிடைக்கும்.
இந்த ஒப்பந்தம் மாநில பிரிவினையின்றி அரசியல் கட்டமைப்புக்கு உட்பட்டு போடோ மக்களுக்கு அரசியல், பொருளாதார உரிமைகளை வழங்கும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமித் ஷா கூறுகையில் ‘‘அசாமில் வசிக்கும் போடோ மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக இன்று செய்யப்பட்ட ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது’’ என குறிப்பிட்டார்.