

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில்(அக்டோபர்-டிசம்பர்) ரயில்வே துறையில் பயணிகள் டிக்கெட் கட்டண வருவாய் வீழ்ச்சி அடைந்து ரூ.400 கோடி அளவுக்குச் சரிந்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது
அதேசமயம் 2-வது காலாண்டில் சரிந்திருந்த சரக்கு கட்டண வருவாய் மூன்றாவது காலாண்டில் ரூ.2,800 கோடி அதிகரித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ சமூக ஆர்வலர் சேகர் கவுர், நடப்பு நிதியாண்டில் கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே சரக்கு கட்டண வருவாய், பயணிகள் டிக்கெட் கட்டண வருவாய் குறித்து தகவல் கேட்டிருந்தார். அதன் விவரங்களை அளித்துள்ளார்
அதில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம் ரூ13 ஆயிரத்து 398.92 கோடி ஈட்டியது. அதன்பின் 2-வது காலாண்டில்(ஜூலை-செப்டம்பர்) இந்த வருவாய் ரூ.13 ஆயிரத்து 243.81 கோடியாக அதாவது ரூ.155 கோடி குறைந்தது. அதன்பின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) பயணிகள் டிக்கெட் கட்டண வருவாய் ரூ.12 ஆயிரத்து 844.37 கோடியாக வீழ்ச்சி அடைந்தது.
சரக்குக் கட்டணத்தைப் பொறுத்தவரை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.29 ஆயிரத்து 66.92 கோடி வருவாய் ஈட்டியது. 2-வது காலாண்டில் ரூ.25 ஆயிரத்து 165.13கோடியாகக் குறைந்தது.
ஆனால், 2-வது காலாண்டில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு மூன்றாவது காலாண்டில் சரக்கு கட்டண வருவாய் ரூ.28 ஆயிரத்து 32.80 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
ரயில்வே துறையின் சரக்குப் போக்குவரத்தில் மந்தமான சூழல் நிலவிய நிலையில், அதை உத்வேகப்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை 25 சதவீதம் சலுகைக் கட்டணத்தை அறிவித்தது. மேலும், பழைய டீசல் ரயில் எஞ்சின்களை மாற்றிவிட்டு மின்சாரத்தில் ஓடும் எஞ்சின்கள் மாற்றப்பட்டதால்,ஏராளமான எரிபொருள் செலவு சேமிக்கப்பட்டது என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.