

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு(என்ஆர்சி) ஆகியவை குறித்து சில அரசியல் கட்சிகள் பொறுப்பற்று நடந்து கொண்டு, மக்களிடம் தேவையற்ற அச்சத்தையும் வதந்திகளையும், பொய்களையும் பரப்புகின்றன என்று யோகா குரு பாபா ராம் தேவ் சாடியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிஏஏ சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டம் தியோரியாவில் யோகா குரு பாபா ராம்தேவ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி குறித்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு தற்போது நாட்டில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த தவறான தகவல்கள் மக்கள் மனதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில அரசியல்கட்சிகள் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்த தேசம் எந்த விதமான தனிப்பட்ட கட்சியையோ அல்லது பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத், அமித் ஷா ஆகிய தனிப்பட்ட மனிதரைச் சார்ந்தோ இருப்பதில்லை. அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நாடு இந்த பாரதம்.
சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்பவர்கள், இந்து-முஸ்லிம்இடையே பிரிவினையை ஏற்படுத்துபவர்கள், இந்தியாவைப் பிரிப்பது குறித்து பேசி, வன்முறையைப் பரப்புகிறார்கள். அவர்களின் செயல் நாட்டுக்கு எதிரானது, அவ்வாறு செயல்படுவது பொறுப்பற்ற குடிமகனின் செயலும், பொறுப்புள்ள கட்சியின் செயலும் அல்ல.
அனைத்து முஸ்லிம் மக்களும் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுவதில்லை. கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நாட்டின் மீது பற்றுக் கொண்டிருக்கும் போது இதுபோன்ற செயல்கள் அவர்களை வேதனையில் ஆழ்த்துகின்றன, அவமானப்படுத்துகின்றன. இதற்குப் பொறுப்பானவர்கள் இந்த தவற்றைச் சீர்படுத்த வேண்டும்.
இவ்வாறு ராம் தேவ் தெரிவித்தார்