

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஜனவரி 19 ஆம் தேதி புருகலிகேலா கிராமத்தில் பத்தால்கரி எனப்படும் எல்லைப் பலகைக் கல்லில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுதிய ஒரு கூட்டம் நடைபெற்றது. கோஷங்களை எழுத பத்தால்கரியைப் பயன்படுத்தக்கூடாது என்று குலிகேலா துணை பஞ்சாயத்துத் தலைவர் ஜேம்ஸ் பூட் எதிர்த்தார்.
ரகுபார் தாஸின் பாஜக அரசு 2016 இல் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து பத்தால்கரி பயன்படுத்தப்பட்டது. இந்த கற்களைக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக பத்தால்கரியில் எழுதிய நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேசத்துரோக குற்றச்சாட்டுகளும் எழுந்தன, மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
ஜனவரி 19 அன்று குலிகேலா துணை பஞ்சாயத்துத் தலைவர் பிரமுக் ஜேம்ஸ் பூட் 6 பேருடன் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் யாரும் வீட்டுக்கு திரும்பி வராததால், குடும்ப உறுப்பினர்கள் தங்கள் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகித்து போலீசில் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக அப்பகுதியில் செய்தி பரவியது. பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து காவல்துறை கூறுகையில்,
கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் கிராமத் தலைவரின் (முகியா) கணவர் ரான்சி புத், கிராமத் தலைவரான சுக்ரம் புத் ஆகியோர் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் விசாரித்த தகவல்களின் அடிப்படையில், 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அதிருப்தி தெரிவித்திருந்தார். குடியரசு தின உரையின்போது அவர் பேசுகையில், ''பழங்குடியினர் 7 பேர் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. மேற்கு சிங்பூம் மாவட்ட சம்பவம் குறித்து நான் வேதனை அடைகிறேன், யாரும் தங்கள் கையில் சட்டத்தை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்.
இந்த வழக்கை விசாரிக்க கடந்த வாரம் காவல்துறையினர் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட எஸ்ஐடி குழுவை அமைத்திருந்தனர்.