

ரூ.60 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பு செய்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் 2-வது முறையாக ஏர் இந்தியாவை விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிடுகிறது மத்திய அரசு.
கடந்த 2018-ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்து நிர்வாகத்தைத் தனியாருக்கு மாற்ற மத்திய அரசு அறிவிப்புச் செய்தது. ஆனால் யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் 100 சதவீத பங்குகளையும், ஏஐ-எஸ்ஏடிஎஸ் கூட்டு நிறுவனத்தில் உள்ள 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
ஆர்வமுள்ள நிறுவனங்கள், தகுதிவாய்ந்த தனிமனிதர்கள் வரும் மார்ச் மாதம் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தகுதியான நிறுவனங்கள் பட்டியல் மார்ச் 31-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்திய மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்குச் சேர்ந்து தற்போது ரூ.60 ஆயிரத்து74 கோடி கடன் இருக்கிறது குறிப்பிடத்தக்கது
அதேசமயம் ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய ஏர் இந்தியா எஞ்சினியரிங் சர்வீஸ், ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ், ஏர் இந்தியா அலைட் சர்வீஸ், ஹோட்டல் கார்ப்பரேஷன் ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்த உள்ளது
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு முதலீட்டு விலக்கலின் இறுதியில் ரூ.23,286 கோடி கடன் தொடர்ந்திருக்கும். மற்ற கடன்கள் ஏர் இந்தியா அசெஸ்ட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு மாற்றப்படும்.
முதல்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்(பிஎம்ஓ) குறித்து அறிந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை ஊழியர்களுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படலாம். ஒட்டுமொத்த பங்குகளில் 3 சதவீத பங்குகள் மட்டும் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதாவது 98 கோடி பங்குகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது" என அவர் தெரிவித்தார்