Last Updated : 27 Jan, 2020 01:39 PM

 

Published : 27 Jan 2020 01:39 PM
Last Updated : 27 Jan 2020 01:39 PM

ஆந்திர மாநில சட்டமேலவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல்: சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைத்த முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி அரசு

ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டமேலவையை கலைக்க முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

சட்டமேலவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிகமான ஆதரவு இருப்பதால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் வியாழக்கிழமை தொடங்கும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு கலைக்கப்படும்.

ஆந்திரச் சட்டப்பேரவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அசுரப் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், 58 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையில் ஒய்எஸ்ஆர் கட்சி 9 உறுப்பினர்களுடன் சிறுபான்மையாகவும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மேலவையில் 28 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையாகவும் இருக்கிறது.

தெலங்குதேசம் கட்சியின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 2021-ம் ஆண்டுதான் முடிவதால், ஆளும் கட்சி கொண்டுவரும் பெரும்பாலான மசோதாக்களுக்கு மேலவை அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் உருவாக்கும் மசோதாவைச் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து அதை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. ஆனால் சட்டமேலவைக்கு அந்த மசோதா அனுப்பப்பட்ட போது, அந்த மசோதா நிறைவேறாமல் தோல்வி அடைந்தது.

ஆந்திர சட்டப்பேரவை மேலவை தலைவர் எம்ஏ.ஷெரீப், 3 தலைநகரங்களை உருவாக்கும் இரு மசோதாக்களையும், சிறப்புக் குழுவுக்குப் பரிசீலனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். தெலுங்கு தேசம் கட்சி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மேலவைத் தலைவர் தனக்கு இருக்கும் விதி 154ன் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறப்புக் குழுவுக்கு அனுப்பினார்.

அதுமட்டுமல்லாமல் மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தையும் ஆங்கில வழிக்கல்வியாக மாற்றும் மசோதாவும் மேலவையில் நிறைவேறவில்லை.

சட்டமேலவையின் இந்த செயலால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மிகுந்த அதிருப்தியில் இருந்தார். கடந்த மாதம் 17-ம் தேதி சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், " நம்முடைய மாநிலத்துக்கு சட்டமேலவை தேவையா என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியது இருக்கிறது.

சட்டமேலவை என்பது மாநிலத்தின் வளர்ச்சி நோக்கில் சிந்திக்காமல், அரசியல் நோக்கோடு சிந்திக்கிறது. மாநிலத்துக்கு சட்டமேலவை என்பது கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. நமது வசதிக்கு ஏற்ப வைத்துக்கொள்ளலாம். இதுகுறித்து விரைவில் முடிவு செய்து மேலவை தேவையா என்பதை ஆய்வு செய்வோம் " எனத் தெரிவித்தார்.

அதன்படி இன்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கூடிய ஆந்திர அமைச்சரவை சட்டமேலவையைக் கலைக்க ஒப்புதல் அளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x