Last Updated : 27 Jan, 2020 12:57 PM

 

Published : 27 Jan 2020 12:57 PM
Last Updated : 27 Jan 2020 12:57 PM

பீம் ஆர்மித் தலைவர் ஆசாத் ஹைதராபாத்தில் கைது; டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) கூட்டங்களுக்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் திங்கள் கிழமை டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

நாடு முழுவதும் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் முக்கிய முகமாக மாறியுள்ள ஆசாத், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் (டிஐஎஸ்எஸ்) மற்றும் அகில இந்திய தலித் முஸ்லிம் ஆதிவாசி முற்போக்கு முன்னணி (ஏஐடிஎம்பிஏஎஃப்) அமைப்பின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த சிஏஏவுக்கு எதிரான இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்திருந்த போது நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் ஹைதராபாத்திலிருந்து வெளியேற்றப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

டெல்லியில் எதிர்ப்பு போராட்டத்தின் போது மக்களைத் தூண்டிய குற்றச்சாட்டில் அவர் கடந்த டிசம்பர் 20 அன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமியா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தருக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒருமாதத்தை நெருங்கியநிலையில், பத்து நாட்களுக்கு முன்பு டெல்லி திஹார் சிறையில் இருந்து போராட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ‘

இந்நிலையில் நேற்று ஆசாத், குஷ் மற்றும் வழக்கறிஞர் மெஹ்மூத் பிராச்சா ஆகியோர் நேற்றிரவு ஒரு ஹோட்டலுக்கு வெளியே கைது செய்யப்பட்டார். அவர்கள் ஒரு சிஏஏ எதிர்ப்புக் கூட்டத்தில் உரையாற்ற ஹைதராபாத்தின் மெஹ்திபட்னத்தில் உள்ள கிரிஸ்டல் கார்டனுக்கு சென்று கொண்டிருந்தனர். முன்னதாக, எஐடிஎம்பிஏஎஃப் செயல்பாட்டாளர்களையும், ஆசாத்தின் பிற ஆதரவாளர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் கூட்டத்தில் கலந்துகொள்ள பார்வையாளர்கள் கலைந்து சென்றனர்.

கூட்டத்திற்கு அனுமதி இல்லாததால் ஆசாத் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 151 ன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் எங்கு காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் இருக்கும் இடம் நள்ளிரவு வரை தெரியவில்லை மற்றும் ஆசாத்தின் ஆதரவாளர்கள் அவரை விடுவிக்கக் கோரி ஹைதராபாத் போலீஸ் கமிஷனரின் அலுவலகத்தில் ஒரு போராட்டத்தை நடத்த முயன்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். ஹைதராபாத் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து ஆசாத்தின் ஆதரவாளர்கள் ட்விட்டர் வாயிலாக அவரை உடனடியாக விடுவிக்கக் கோரினர்.

காவல்துறையினர் அவரை ஹைதராபாத் விமான நிலையத்திற்கு அழைத்து வந்து டெல்லிக்கு அனுப்புவதாக தலித் தலைவர் திங்கள்கிழமை காலை ட்வீட் செய்துள்ளார். குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான இரண்டு எதிர்ப்புக் கூட்டங்களில் உரையாற்ற ஹைதராபாத் வந்திருந்த ஆசாத், தெலுங்கானாவில் சர்வாதிகாரம் உச்சத்தில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆசாத் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான இரண்டு எதிர்ப்புக் கூட்டங்களில் உரையாற்ற ஹைதராபாத் வந்தேன். தெலுங்கானாவில் சர்வாதிகாரம் உச்சத்தில் இருக்கிறது. முதலில், எங்கள் ஆதரவாளர்கள் பிரம்பால் தாக்கப்பட்டனர், பின்னர் நான் கைது செய்யப்பட்டேன்.

இப்போது, அவர்கள் என்னை ஹைதராபாத் விமான நிலையத்திற்கு அழைத்து வந்து டெல்லிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். (தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் அலுவலகம் என்று ஹேஷ்டேக் குறியிட்டு), பகுஜன் சமாஜ் இந்த அவமானத்தை மறக்காது. நான் விரைவில் திரும்பி வருவேன்.

இவ்வாறு சந்திரசேகர் ஆசாத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x