''மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்படக் கூடாது'' - சிஏஏவை கடுமையாக விமர்சித்த யஷ்வந்த் சின்கா

''மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்படக் கூடாது'' - சிஏஏவை கடுமையாக விமர்சித்த யஷ்வந்த் சின்கா
Updated on
2 min read

மதத்தின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்துவதன்மூலம், வகுப்புவாத அமைதியை நம்பிய மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்படக்கூடாது என்று சிஏஏ குறித்து பாஜக முன்னாள் எம்.பி யஷ்வந்த் சின்ஹா மறைமுறைகமாக விமர்சனம் செய்துள்ளார்.

ஒருகாலத்தில் பாஜகவின் பொருளாதார பிரச்சினைகள் குறித்த ஆலோசனைகளையும் யோசனைகளையும் வழங்கும் நிபுணர்களில் ஒருவராக விளங்கியவர் யஷ்வந்த் சின்ஹா. அவரது தலைமையில் சில தினங்களுக்கு முன் ஒரு குழு ஆக்கிராவிலிருந்து காந்தி சாந்தி யாத்திரை புறப்பட்டது. சின்ஹா தலைமையிலான குழு நேற்று எட்டாவா கிராமத்தை அடைந்தது. எட்டா கிராமம் என்பது 1857 கிளர்ச்சியின் முக்கிய மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்ஹா தனது ஆதரவாளர்களுடன் ஜனவரி 9 ஆம் தேதி மும்பையில் இருந்து தனது அமைதிப் பயணத்தைத் தொடங்கினார். இதுவரை அவர் ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் இப்போது உத்தரபிரதேசத்தை வந்தடைந்துள்ளார். காந்தி மறைந்த தினமான ஜனவரி 30 ஆம் தேதி டெல்லியின் ராஜ்காட்டில் இந்த யாத்திரை நிறைவடையும்.

இந்த யாத்திரை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வரும் சிறுபான்மையினருக்கு முஸ்லிம்களை தவிர்த்து இந்திய குடியுரிமையை வழங்க முற்படும் சிஏஏ சட்டத்தை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

குடியரசு நாள் கொண்டாட்டங்களிலும் சின்ஹா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உ.பி. முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், எஸ்பி பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். சின்ஹாவை வரவேற்பளித்து சால்வை அணிவித்தனர்.

இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக யஷ்வந்த் சின்ஹா மூவர்ண தேசியக் கொடியை 155 - அடி உயர கம்பத்தில் ஏற்றினார். அதன் பின்னர் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அங்கு நடைபெற்ற ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றிய சின்ஹா கூறியதாவது:

நாம் அமைதி, அகிம்சை செய்தியை பரப்ப தயாராக இருக்கிறோம். அமைதியை விரும்பிய காந்தியின் பெயரில் நாங்கள் மூவாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு யாத்திரையை எடுக்க முடிவு செய்ததற்கு காரணம் நாட்டின் அரசியலமைப்பு, அதன் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது.

பெரும் அமைதியின்மை இருப்பதாகத் தெரிகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்கள், எல்லா இடங்களிலும் போராட்டங்கள் நடந்துகொண்டுள்ளன. இந்த யாத்திரை மீண்டும் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத்தான்.

சமீப காலமாக ஒருவருக்கொருவர் வெறுப்பு மக்களிடையே வளர்ந்து வருகிறது, இதை சரி செய்ய வேண்டும். ஜனநாயகத்தில், நாம் ஒவ்வொருவருக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு. ஏதேனும் ஒரு விஷயத்தில் மக்கள் அதிருப்தி அடைந்தால், அரசாங்கம் மக்களின் குறைகளை செவிமடுத்துக் கேட்க வேண்டும்

மத அடிப்படையில் நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது.

மத்தியில் ஒரு சில சுயநல அரசியல்வாதிகளின் செயல்களால் தேசத்தின் தந்தை கொல்லப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் சமாதான செய்தியை 'காந்தி சாந்தி யாத்திரை வடிவத்தில்' கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in