

ஆந்திர தலைநகரம் 3 ஆக பிரிக்கப்பட உள்ளது. இதற்கான மசோதாவும் சமீபத்தில் பேரவையில் நிறைவேறியது. ஆனால், தலைநகர் அமராவதியை மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 40 நாட்களாக அமராவதியில் உள்ள 29 கிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று குண்டூர் மாவட்டம், தெனாலியில், அமராவதிக்காக சிலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் 3 தலைநகரங்கள் இருக்க வேண்டுமென வலியுறுத்தி கூடாரம் அமைத்திருந்தனர். அப்போது, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆலபாட்டி ராஜு, அமராவதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களது கூடாரத்திற்கு சென்றார். அப்போது, எதிரில் அமர்ந்திருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார், முன்னாள் அமைச்சர் மீது, முட்டை, அழுகிய தக்காளி போன்றவற்றை வீசி தாக்கினர்.
ஆந்திராவில், அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய இடங்களில் தலைநகரங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், இம்மசோதா, ஆந்திர மேலவையில் நிறைவேற்றப்பட்ட வில்லை. ஏனெனில் அங்கு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினர்களே அதிகம் என்பதால், அங்கு இது நிறைவேறவில்லை. இதனால், ஒவ்வொரு முறையும், அரசின் நல திட்டங்கள் உட்பட பல மசோதாக்களுக்கு மேலவையின் அனுமதியும் தேவை என்பதால், தங்கள் கட்சிக்கு மெஜாரிட்டி பலம் இல்லாத மேலவையை ரத்து செய்தால் என்ன? என தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் ஆலோசித்து வருகின்றார். இது குறித்து நேற்று அவரது அலுவலகத்தில் சில அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களுடன் ஜெகன் ஆலோசனை நடத்தினார். சிலர் இதற்கு மாற்று ஏதேனும் உள்ளதா என சட்ட ஆலோசனையை கேட்கலாம் என கூறினர்.
மேலும், சிலர் மேலவையை ரத்து செய்வதே நல்லது என ஆலோசனை வழங்கினர். இன்னும் சிலரோ, 2021-ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மேலவையில் பலம் வந்து விடும் என்பதால், அதனை ரத்து செய்யத் தேவையில்லை என கூறினர். இந்நிலையில், நாளை திங்கட்கிழமை மேலவை ரத்து குறித்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படுமா, இல்லையா என்பது தெரியவரும். என். மகேஷ்குமார்