ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையின் முக்கியத்துவத்தை சிலர் உணராமல் இருக்கின்றனர்- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆதங்கம்

ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையின் முக்கியத்துவத்தை சிலர் உணராமல் இருக்கின்றனர்- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆதங்கம்
Updated on
1 min read

ஜனநாயகத்தின் அடிப்படையாக கருதப்படும் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை நம் நாட்டில் இன்னமும் சிலர் உணராமல் இருப்பது வேதனையளிப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம்தேதி உருவாக்கப்பட்டது. இதனைக்குறிக்கும் விதமாக, இந்த நாளானது ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தேசிய வாக்காளர் தின சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

இந்திய மக்கள் அனைவருக்கும் எனது தேசிய வாக்காளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இவ்வளவு பெரிய நாட்டில், எந்தத் தடங்கலும் இன்றி தேர்தல்கள் நடைபெறுவதைக் கண்டு உலக நாடுகளே பிரமிப்பில் ஆழ்ந்துள்ளன. இதனை சாத்தியமாக்கியது முழுக்க முழுக்க நமது மக்கள்தான்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததும், அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது, எந்தவித பாரபட்சமும் இன்றி வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இதுகுறித்து கேள்விப்பட்ட பல உலக நாடுகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. வெறும் 16 சதவீத எழுத்தறிவும், அதிக அளவில் வறுமையும் பீடித்திருக்கும் ஒருநாட்டில், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது என்றைக்கும் வெற்றி பெறாது என அவர்கள் கூறினர். இன்னும் சிலரோ, இந்தியாவின் இந்த முடிவினை, வரலாற்றின் மிகப்பெரிய கேலிகூத்து என விமர்சித்தனர்.

ஆனால், அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் நம் நாட்டு மக்கள் அதிக அளவில் பங்களிப்பை வழங்கி, உலக நாடுகளின் விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டனர். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் தங்கள் மீது வைத்த நம்பிக்கையை நம் மக்கள் நிரூபித்துக் காட்டினர்.

ஒரு ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய கவுரவமாகவும், பெருமையாகவும் கருதப்படுவது வாக்குரிமைதான். ஆனால், நம் நாட்டில்சிலர், இன்னமும் கூட வாக்குரிமையின் முக்கியத்துவத்தை உணராதவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு சில விஷயங்களைக் கூற விரும்புகிறேன். இன்றளவிலும் பல ஜனநாயக நாடுகளில் வாக்குரிமையை பெறுவதற்காக மக்கள் போராடி வருகின்றனர்.

அவ்வாறு இருக்கும்போது, நம் நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை எந்த சிரமமும் இன்றி கிடைத்திருப்பதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in