Last Updated : 25 Jan, 2020 10:14 PM

 

Published : 25 Jan 2020 10:14 PM
Last Updated : 25 Jan 2020 10:14 PM

பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தின் சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், வேணு ஸ்ரீனிவாசனுக்கு விருது; ஜேட்லி, சுஷ்மாவுக்கும் விருது

2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.இதில் தமிழகத்தின் சமூக சேவகர் எஸ். ராம கிருஷ்ணணுக்கு பத்மஸ்ரீ விருதும், தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசனுக்குப் பத்மபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.

அதன்படி தேசத்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள் அனைத்து ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல் மாதம் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் வழங்குவார்.

இந்த ஆண்டு 141 சிறந்த மனிதர்களுக்குப் பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட உள்ளன. விருது பெறுபவர்களில் 34 பேர் பெண்கள், 18 பேர் வெளிநாட்டவர், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் மறைந்த 12 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது

மறைந்த முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜார்ஸ் பெர்னான்டஸ் , உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம விபூஷன் விருதும், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு பத்மபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு ஸ்ரீநிவாசன், நாகாலாந்து முன்னாள் முதல்வர் எஸ்.சி.ஜமீர், ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர் முசாபர் ஹூசைன் பெய்க் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், பிரதீப் தலப்பி்ள்(அறிவியல் மற்றும் பொறியியல்), காலே சாஹிப் மகபூப், ஷேக் மகபூப் சுபானி(கலை), புதுச்சேரியைச் சேர்ந்த எம்.வி.முனுசாமி, கிருஷ்ணபக்தர்(கலை), மனோகர் தேவதாஸ்(கலை), லலிதா &சரோஜா, சிதம்பரம்(கூட்டாகவிருது கலை) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்(சமூகசேவகர்), புதுச்சேரியைச் சேர்ந்த மனோகர் தாஸ்(கல்வி, இலக்கியம்), வேணு ஸ்ரீனிவாசன்(தொழில்,வர்த்தகம்) ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுப்பிரிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், முன்னாள் ஹாக்கி வீரர் எம்.பி. கணேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஜிது ராய், இந்திய மகளிர் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பீம்பெம் தேவி, வில்வித்தை வீராங்கனை தருணதீப் தேவி ராய் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x