Last Updated : 25 Jan, 2020 04:05 PM

 

Published : 25 Jan 2020 04:05 PM
Last Updated : 25 Jan 2020 04:05 PM

குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: நிர்பயா குற்றவாளி புதிய மனு

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்(32), தான் விண்ணப்பித்திருந்த கருணை மனுவை குடியுரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கடந்த 17-ம் தேதி நிராகரித்தார். அவர் நிராகரித்தது குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தக் கோரி புதிய மனுவில் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில், 4 பேரும் அடுத்தடுத்து நீதிமன்றங்களில் தொடர்ந்து மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா குற்றச் சம்பவம் நடந்தபோது தான் பதின்வயது உடையவராக இருந்தேன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17-ம் தேதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது

இந்நிலையில், குற்றவாளி முகேஷ் சிங் சார்பில் வழக்கறிஞர் விரிந்தா குரோவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்தார். அதில், " தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்தேன். அதையும் அவர் நிராகரித்துவிட்டார். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் விரிந்தா குரோவர் நிருபர்களிடம் கூறுகையில், ". சத்ருஹன் சின்ஹா வழக்கில் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தபின் அரசியலமைப்புச் சட்டம் 32-வது பிரிவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக திஹார் சிறை அதிகாரிகள் குற்றவாளிகள் 3 பேர் தொடர்பான ஆவணங்களைத் தர மறுக்கிறார்கள், அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளது எனக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் திஹார் சிறை அதிகாரிகள் ஆவணங்கள் வழங்கிவிட்டதாகத் தெரிவித்துவிட்டதால், அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x