

நம்முடைய தேர்தல் நடைமுறையை பல்வேறு முயற்சிகளால் சக்தி வாய்ந்ததாக தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ல் மத்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், கடந்த 2011 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது இதன் முக்கிய நோக்கம் ஆகும். இந்தநிலையில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘நம்முடைய தேர்தல் நடைமுறையை பல்வேறு முயற்சிகளால் சக்தி வாய்ந்ததாகவும், அனைவரும் பங்கேற்கும் வகையிலும் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
ஜனநாயகத்தை வலிமை அடைய செய்யும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி மக்களிடம் தாக்கத்தினை ஏற்படுத்தும் என நம்புகிறேன்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.