

சீனாவில் இருந்து மும்பை திரும்பிய இருவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதேசமயம் சீனாவில் இருந்து திரும்பிய மேலும் ஒரு நபருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த 2002-2003 இல் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் வைரஸ் வேகமாகப் பரவியதன் காரணமாக 650 பேர் உயிரிழந்தனர். தற்போது, அதேபோன்றதொரு வைரஸ் சீனா முழுக்கப் பரவியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சந்திரப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் உலகிலிருந்து லட்சக்கணக்கானோர் சீனாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், கரோனா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் என்று தெரியவந்திருப்பதும் சீனா சுகாதாரத் துறையினரின் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனாவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சீனாவில் இருந்து மும்பைக்கு வந்த 2 பேருக்கு சளி மற்றும் இருமல் இருந்தது. அவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. எனினும் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதேசமயம் சீனாவில் இருந்து திரும்பிய மேலும் ஒரு நபருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பை மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் சீனாவில் இருந்து திரும்பிய பலருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்த உத்தரவிப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அறிவுறுத்தல்கள் அனுப்பட்டுள்ளன.