

சீனாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மேலும் 13 நகரங்களில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. தற்போது, கரோனா வைரஸ் சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இந்த வகை வைரஸுக்கு சீனாவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 835 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் சீனாவின் தேசிய நுண் உயிரியல் மையம், கரோனா வைரஸின் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் புகைப்படத்தை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. வூஹான் மற்றும் குவாங்காங் நகரங்களில் ரயில், பேருந்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலால் சுவாசக் கோளாறு, அதிகப்படியான காய்ச்சல் ஆகியவை ஏற்படுகின்றன.மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டது. சீனா மட்டுமல்லாமல் தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இவ்வைரஸ் பரவியுள்ளது.
சீனாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மேலும் 13 நகரங்களில் போக்குவரத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. மத்திய ஹூபேய் மாகாணத்திலுள்ள ஜியன்னிங், ஜியோவோகான், என்ஷி, ஜிஜியாங் ஆகிய 4 நகரங்களில் நேற்று போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அங்குள்ள பஸ், ரயில், விமான நிலையங்கள் மூடப்பட்டன. இந்த நகரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு 24 மணி நேரமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹுவாங்ஷி. ஜிங்சவ் நகரங் களிலிருந்து ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. என்ஷி, ஜிஜியாங் நகரங்களில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகமாக உள்ள வூஹான் நகரத்தில் பஸ், ரயில், விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து படகுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
13 நகரங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சீனாவில் 4.1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நகரங்களில் எப்போது போக்குவரத்து தொடங்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே இந்த வைரஸ், பாம்புகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெய்ஜிங்கிலுள்ள பெக்கிங் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வி ஜி கூறும்போது, “இந்த வகை வைரஸானது பாம்புகளில் தென்படுகின்றன. எனவே இவை பாம்பிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம்” என்றார். ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் இதை ஏற்கவில்லை. இந்த வகை வைரஸ் வவ்வால்களில் இருந்து பரவியிருக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சார்ஸ் வைரஸ்
கடந்த 2002-03-ம் ஆண்டில் சீனா, ஹாங்காங்கில் சார்ஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது 650 பேர் உயிரிழந்தனர். இந் நிலையில் தற்போது கரோனா வைரஸ் அதைப் போன்று வேகமாக பரவி வருகிறது.