

அமெரிக்க படைகளை வெளியேற்ற வலியுறுத்தி இராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
இராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம், அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி மற்றும் இராக் நாடாளுமன்ற குழு (ஷியா) தலைவர் அபு மாதி அல்-முஹன்திஸ் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, இராக்கில் முகாமிட்டுள்ள 5,200 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில், ஷியா பிரிவு மதகுரு முக்ததா சாத் என்பவரின் ஆதரவாளர்கள் பாக்தாத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.
இந்த போராட்டக் குழுவின் பிரதிநிதி ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், “வெளிநாடுகளைச் சேர்ந்த படைப் பிரிவினர் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். அமெரிக்கா, இராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். அமெரிக்க ராணுவ மற்றும் கண்காணிப்பு விமானங்கள் இராக் வான் பகுதியில் பறக்க தடை விதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
- ஏஎப்பி