குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கூடாது என கோரி வழக்கு: மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கூடாது என கோரி வழக்கு: மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்று தாக்கல் செய்யபட்ட மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் போராட்டம் நடத்திய சிலர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கூடாது. அதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என்று அதில் எம்.எல்.சர்மா கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த மனுவை ஏற்க முடியாது என்றும், மனுவை வழக்கறிஞர் எம்.எல்.சர்மா திரும்பப் பெறவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது தேசிய பாதுகாப்புச் சட்ட விதிகள் மீறப்பட்டதாகக் கூறி சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. எனவே இதுதொடர்பாக ஒரு புதிய மனுவை மனுதாரர் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

போராட்டம் நடத்துவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் கடந்த 10-ம் தேதி டெல்லி போலீஸாருக்கு அதிகாரம் வழங்கினார். ஜனவரி 19-ம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு இந்த அதிகாரத்தை அவர் வழங்கியுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவரை போலீஸார் விசாரணை செய்யாமலேயே 12 மாதங்கள் காவலில் வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

154 பேர் மனு

இதனிடையே குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள், அரசு ஊழியர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் என 154 பேர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு வழங்கினர். ஓய்வு பெற்ற நீதிபதியும், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத் தலைவருமான பெர்மாட் கோலி தலைமையில் பிரதிநிதிகள் குழு, குடியரசுத் தலைவரைச் சந்தித்து இந்த மனுவை வழங்கியது. – பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in