

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள், தமிழகத்தில் மறைந்த தலைவர்களின் சிலையை சேதப்படுத்துபவர்களுக்கும், அவமரியாதை செய்பவர்களுக்கும் தமிழக அரசு சட்டத்தின் அடிப்படையில் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகேயுள்ள களியப்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை காவல்துறை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். மேலும் காவல்துறை அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
தமிழகத்தில் அவ்வப்போது மறைந்த தலைவர்களின் சிலைக்கு அவமரியாதை செய்வதும், சிலையை சேதப்படுத்துவதும் தொடர்கிறது. இச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சட்டத்தால் வழங்கப்படும் கடுமையான தண்டனையால் இனிமேல் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடாத நிலை ஏற்பட வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சியினுடைய மறைந்த தலைவர்களுக்கு புகழ் சேர்க்க வேண்டுமே தவிர அவர்களுக்கு அவமரியாதை செய்யும் செயல்கள் நிகழாமல் இருப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே பெரியார் சிலையை சேதப்படுத்தியது ஏற்புடையதல்ல. மேலும் பெரியார் சிலை உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் சிலைக்கு உரிய பாதுகாப்பும், பராமரிப்பும் செய்து கொடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’’ எனக் கூறிள்ளார்.