சிஏஏவினால் அதிருப்தி: ம.பி.யில் 80 பாஜக முஸ்லிம் நிர்வாகிகள் ராஜினாமா

சிஏஏவினால் அதிருப்தி: ம.பி.யில் 80 பாஜக முஸ்லிம் நிர்வாகிகள் ராஜினாமா
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் முஸ்லிம் தலைவர்கள் 80 பேர் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து விதமான பதவிகளையும் ராஜினாமா செய்தனர். சிஏஏ மக்களைப் பிளவுபடுத்தும் ஒரு நடவடிக்கை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்தச் சட்டத்துக்கு மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களைப் நடத்தி வருகிறன. பாஜக சார்பில் குடியுரிமைச் சட்ட ஆதரவுப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

80 பேர் ராஜினாமா செய்தது குறித்து ம.பி.யைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளில் ஒருவரான ராஜிக் குரேஷி ஃபர்ஷிவாலா இதுகுறித்து கூறியதாவது:

''80 முஸ்லிம் பாஜக உறுப்பினர்கள் தங்கள் அடிப்படை உறுப்பினர், பாஜக அலுவலகப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துவிதமான பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளனர். பாஜகவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளனர்.

இது மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் ஓர் ஏற்பாடு ஆகும். சிஏஏ நடைமுறைக்கு வந்தபின் (2019 டிசம்பரில்) எங்கள் சமூகத்தின் நிகழ்வுகளில் பங்கேற்பது எங்களுக்கு மிகவும் கடினமாகிவிட்டது.

எங்கள் சமூக நிகழ்வுகளில், நாங்கள் கலந்துகொள்ளும்போது, அங்குவரும் முஸ்லிம் மக்கள் எங்களைச் சபித்தனர். பிளவுபடுத்தும் ஒரு சட்டத்தை எதிர்க்காமல் எவ்வளவு நாளைக்கு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள் என்று அவர்கள் கேட்டனர்.

நட்டாவுக்கு நாங்கள் எழுதியுள்ள கடிதத்தில், ''எந்தவொரு சமூகத்தின் துன்புறுத்தப்பட்ட அகதிகளும் இந்தியக் குடியுரிமையைப் பெற வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபரை, மதத்தின் அடிப்படையில் ஊடுருவிய பயங்கரவாதி என்று நீங்கள் தீர்மானிக்க முடியாது. இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு சமத்துவ உரிமை உண்டு. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு மத அடிப்படையில் சிஏஏவைச் செயல்படுத்துகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாட்டைப் பிளவுபடுத்தும். அதுமட்டுமின்றி அரசியலமைப்பின் அடிப்படை ஆன்மாவுக்கு எதிரான செயலாகும்" எனக் குறிப்பிட்டுள்ளோம்.

விஜயவர்ஜியாவுக்கு நெருக்கமானவர்கள்

ராஜினாமா செய்த சில பாஜக முஸ்லிம் நிர்வாகிகள் அனைவரும் பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியாவுடன் நெருக்கமானவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

ராஜினாமா குறித்து விஜயவர்ஜியாவிடம் கேட்டபோது, ''அவர்கள் ராஜினாமா குறித்து எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. ஒருவேளை அவர்களில் யாராவது தவறாக வழிநடத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு சிஏஏவைப் பற்றி விரிவாக விளக்கமளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in