நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் இருவர் டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் : கோப்புப்படம்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் : கோப்புப்படம்
Updated on
2 min read

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரில் இருவர் டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

மருத்துவ மாணவியைப் பலாத்காரம் செய்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா குற்றச் சம்பவம் நடந்தபோது தான் பதின்வயது உடையவராக இருந்தேன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகளில் மற்ற இருவர்களான அக்சய் குமார் சிங் (31), பவன் குமார் சிங் (25) ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்காக சில முக்கிய ஆவணங்களை திஹார் சிறை அதிகாரிகளிடம் இருந்து இரு குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் கோரினார். ஆனால், அந்த ஆவணங்களைத் தருவதில் திஹார் சிறை அதிகாரிகள் தொடர்ந்து தாமதம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், குற்றவாளிகள் இருவரான அக்சய் குமார் சிங், பவன் குமார் சிங் இருவருக்கும் தேவைப்படும் ஆவணங்களை விரைவாக வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் இருவர் தரப்பிலும் வழக்கறிஞர் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் நாளை (சனிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

நிர்பயா வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி சதீஸ் அரோரா, உச்ச நீதிமன்றத்தின் பதிவாளராக அடுத்த ஓராண்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் பிப்ரவரி 1-ம் தேதி குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆயத்தப் பணிகள் நடந்துவரும் நிலையில், இந்த சீராய்வு மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in