Published : 24 Jan 2020 01:43 PM
Last Updated : 24 Jan 2020 01:43 PM

கேரளா வெள்ள நிவாரணத்திற்காக கூடுதல் நிதி அளிக்க மத்திய அரசு மறுப்பு

கேரளாவில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ள நிவாரணத் தொகையில் 50% நிதியை பயன்படுத்தியதற்கான சான்றிதழை கேரளா அளிக்காததால் கூடுதல் வெள்ள நிவாரண நிதி அளிக்க முடியாது என்று மத்திய அரசு மறுத்துள்ளது.

தேசிய பேரிடர் நிதியத்திலிருந்து மத்திய அரசு கேரளாவுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் அளிக்க முடியாது என்று மறுத்துள்ளது. ரூ.3000 கோடிக்கும் அதிகமான வெள்ள நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளது இதில் 50% தொகையை பயன்படுத்தியதற்கான சான்றிதழை கேரளா அளிக்கவில்லை, இதனால் கூடுதல் தொகை மறுக்கப்பட்டுளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு மீண்டும் வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டதையடுத்து கேரள அரசு கூடுதல் நிதியாக ரூ.2000 வேண்டுமென மத்திய அரசிடம் கோரியிருந்தது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “என்.டி.ஆர்.எஃப்-ன் கீழ் அளிக்கப்பட்ட வெள்ள நிவாரணத் தொகையை கேரளா அரசு செலவிட முடியவில்லை. மேலும் எவ்வளவு பேருக்கு வெள்ள நிவாரணத் தொகை பயன் கிட்டியது என்ற எண்ணிக்கையையும் கேரள அரசு வழங்கவில்லை, அளிக்கப்பட்ட ரூ.3000 கோடி நிவாரணத் தொகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் வரை ரூ.900 கோடியைத்தான் கேரள அரசு பயன்படுத்தியுள்ளது” என்றார்.

90 ஆண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளா 2018-ல் சந்தித்தது 400 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்தனர் 2019-ல் மீண்டும் வெள்ளம் தாக்கியதில் 100 பேர் கொல்லப்பட்டனர், சுமார் ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இணையதளத் தகவலின் படி டிசம்பர் 31, 2019 வரை கேரளாவுக்கு மத்திய அரசு அளித்துள்ள தொகை எஸ்.டி.ஆர்.எஃப்.-ன் கீழ் ரூ.168.75 கோடி. அதில் 52.27 கோடி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநில பேரிடர் ரெஸ்பான்ஸ் நிதியத்திலிருந்து 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.8,068.33 கோடி அனுப்பியுள்ளது. எஸ்டிஆர்எஃப்-ல் கேரளாவுக்காக ரூ.300 கோடி உள்ளது.

கேரளா பதில்

இது தொடர்பாக கேரளா முதன்மைச் செயலர் வி.வேணு, கூறும்போது, “அனுமதிக்கக் கூடிய தொகையை அனுமதிக்கவில்லை, இது தொடர்பான கேரள அரசின் 2019 தீர்மானமும் பரிசீலிக்கப்படவில்லை. எங்களிடம் நிதியிருக்கிரதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்தான், முதற்கேள்வி, எங்கள் தீர்மானத்தை ஆராய்ந்து முடிவெடுத்தார்களா என்பதே” என்று சாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x