

டெல்லியில் கண்காணிப்பு கேமிரா இல்லை, வைபை வசதி இல்லை என்று குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைக்கும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் தங்களின் 5ஆண்டுக்கால சாதனைகளையும், திட்டங்களையும், அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்களையும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார். பாஜக, டெல்லியின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியும், அரவிந்த் கேஜ்ரிவாலின் நிர்வாகச் சீர்கேட்டையும் குறைகூறி பிரச்சாரம் செய்து வருகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிரச்சாரத்தில் பேசுகையில் " டெல்லியில் இலவச வைபை இன்டர்நெட் வசதி இருக்கிறது என்று அரசு கூறுகிறது. ஆனால், இன்டர்னெட் வசதியைத் தேடித் தேடி எனது செல்போனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டது" எனத் தெரிவித்திருந்தார்
இதற்கு பதிலடி தரும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், " அமித் ஷா ஜி, எங்களின் அரசு மொபைல் போனுக்கு இலவசமாக சார்ஜ் செய்யும் வசதியையும் அளித்துள்ளது, வைபை வசதியையும் அளித்திருக்கிறது. தேவைப்பட்டால், உங்கள் செல்போனுக்கு இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் டெல்லி மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரமும் வழங்குகிறோம். என்பதால், உங்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கமாட்டோம்.
டெல்லியில் பள்ளிகளில் கண்காணிப்பு கேமிராவை பொருத்தியதைப் பார்க்கவில்லை என்றும், எத்தனை பள்ளிகளுக்குக் கண்காணிப்பு கேமிரா பொருத்தியுள்ளீர்கள் என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பிருந்தார்.
ஆனால், கண்காணிப்பு கேமிராக்களை பார்க்கவில்லை என்று கூறிய நீங்கள் இப்போது கேமிரா இருப்பதைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடன் வாருங்கள் உங்களுக்குக் கண்காணிப்பு கேமிராக்களை காண்பிக்கிறோம். டெல்லி மக்கள் தங்கள் அரசியலை மாற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கண்காணிப்பு கேமிரா, தரமான பள்ளிகள், வீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாஜகவை வாக்கு சேகரிக்க வைத்துள்ள டெல்லி மக்களின் அரசியல் மகிழ்ச்சியாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்
ஆம்ஆத்மி அரசு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இலவசங்களை வாரி வழங்குகிறது என பாஜகவும், காங்கிஸ் கட்சியும் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பதில் அளித்து, ட்விட்டில் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், " சமூகத்தில் குறைந்த அளவு இலவசங்களை மக்களுக்கு அரசு வழங்குவதில் தவறில்லை. அது பொருளாதாரத்துக்கும் நல்லதுதான். இதனால் ஏழைகளுக்கு அதிகமான பணம் கிடைக்கும், அந்த பணத்தால் பொருட்கள் வாங்கும் போது தேவை அதிகரித்தும். இதை அளவோடு செய்ய வேண்டும், இதைச் செய்வதற்காக அதிகமான வரி விதிப்பு செய்ய வேண்டியிருக்கும். இலவசங்களால் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏதும் வராது" எனத் தெரிவித்துள்ளார்