Last Updated : 24 Jan, 2020 12:08 PM

 

Published : 24 Jan 2020 12:08 PM
Last Updated : 24 Jan 2020 12:08 PM

மணமகன்களை குதிரையில் சென்று அழைத்து வந்த மணப்பெண்கள்: மத்தியப் பிரதேசத்தில் புதுமையான திருமணம்

மத்தியப் பிரதேசத்தில் மணமகனை அழைத்து வர ஊர்வலமாகச் சென்ற மணமக்கள் | படம்: ஏஎன்ஐ

போபால்

வழக்கமாக திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளைதான் குதிரையில் வருவார். மாறாக மணப்பெண்கள் கையில் வாளேந்தி, குதிரையில் சென்று மணமகன்களை அழைத்து வந்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஆனந்த் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்துள்ள இந்தப் புதுமையான திருமண ஊர்வலம் நடந்தது. சாக்ஷி மற்றும் சிருஷ்டி என்ற இரண்டு மணப்பெண்கள், குதிரைகளில் தங்கள் மாப்பிள்ளைகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர் என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

இந்தூரைச் சேந்த சாக்ஷி மற்றும் சிருஷ்டி ஆகிய இரு சகோதரிகளுக்கும் நேற்று காலை பாட்டிதர் சமுதாயத்தின் பாரம்பரியத்தின்படி நடைபெற்ற திருமணத்தில் மேலும் பல புதுமைகள் இருந்தததாகக் கூறப்படுகிறது.

திருமண அழைப்பிதழ் ஒரு கைத்தறித் துணியில் அச்சடிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உணவுடன் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வுச் செய்திகளும் வழங்கப்பட்டன.

தாவரங்களை குழந்தைகளைப் போல பேணி வளர்த்தால் அவை மாசுபாட்டிலிருந்து நம்மைக் காக்கும் என்று கூறி அனைவருக்கும் நிழல் தரும் மரக்கன்றுகளும், மருத்துவ மூலிகைச் செடிகளும் அளிக்கப்பட்டன. இவற்றில் முக்கியமாக வேம்பு, துளசி ஆகியவை இடம் பெற்றிருந்தன.

வழக்கமாக மணமகன்தான் குதிரையில் சென்று மணமகளை அழைத்து வருவவது வழக்கம். ஆனால், சாக்ஷி மற்றும் சிருஷ்டி என்ற இரண்டு சகோதரிகள் உறவினர்கள் புடை சூழ ஒரு பிரம்மாண்டமான ஊர்வலத்தில், பாரம்பரிய உடைகளுடன் சென்றனர். இருவரும் தனித்தனி குதிரைகளில் வாளேந்தியபடியே மணமகன்களின் வீடுகளை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து மணமகன்களை காண்ட்வா கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசிய மணமகளின் தந்தை கூறுகையில், ''இத்திருமணம் பாரம்பரிய முறைப்படிதான் நடைபெற்றது. எனினும் ஆணுக்குப் பெண் சமமாக நடத்த வேண்டும் என்று கூறப்படும் இன்றைய சமுதாயத்தில் ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டுமென இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டோம். இதை மணமகன்களின் குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டனர். இதை வருங்காலத்தில் மக்களும் பின்பற்றினால் அதுவே எங்கள் முயற்சியின் வெற்றி'' என்றார்.

இத்திருமண ஊர்வலம் பார்த்த மக்கள் பிரம்மித்து நின்றனர். இது மத்தியப் பிரதேசத்தின் ஊடகங்களில் கவனம் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x