

அமராவதியில் நேற்று நடந்த சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை, வரும் 2020-21 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துவது எனும் சட்டத் திருத்த மசோதாவிற்கு சட்டப்பேரவை ஒப்புதல் வழங்கியது.
இது குறித்து முதல்வர் ஜெகன் பேசுகையில், “இந்த போட்டி நிறைந்த உலகத்தில் ஆங்கிலம் மிக முக்கிய மொழியாக கருதப்படுகிறது. இதற்காக ஏழை பிள்ளைகளும் ஆங்கிலம் கற்கும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி திட்டம் கட்டாயமாக்கப்படுகிறது. இது வரும் ஜூன் முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியருக்கும் ரூ. 1350 மதிப்புள்ள கல்வி ‘கிட்’ இலவசமாக வழங்கப்படும். இதில் பாட புத்தகங்கள் உட்பட மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படும். ஆனால், எதிர்கட்சியினர், ஏழைகளுக்கு முக்கியமான இந்த கல்வி திட்டத்தையும் மேலவையில் எதிர்க்கின்றனர். ஆனால் இந்த அரசு இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும். இவ்வாறு ஜெகன் கூறினார்.
மேலவை அவசியமா ?
முன்னதாக, நேற்று முன்தினம், 3 தலைநகரங்கள் குறித்த மசோதா மேலவைக்கு வந்தது. ஆனால், அங்கு ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு போதிய பலம் இல்லாத காரணத்தினால், அந்த மசோதா நிறைவேற்றப்பட வில்லை. இதனால், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பேரவையில் பேசும்போது, “சட்டப்பேரவை ஒரு மசோதாவை நிறைவேற்றிய பிறகு, மேலவை புறக்கணித்தால் என்ன அர்த்தம் ? ஆதலால், மேலவை அவசியம் இல்லை. இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு ஜெகன் பேசினார்.