

மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராமுக்கு அவரது 40 ஆண்டுகால பத்திரிகைத்துறை சேவையை பாராட்டி கேரள ஊடக அகாடமியின் சார்பில் தேசிய ஊடக விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை மார்ச் மாதம் கொச்சியில் நடக்கும் ஊடக மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்க உள்ளார்.
கேரளாவில் இருந்து செயல்படும் கேரள ஊடக அகாடமியின் தலைவர் ஆர்.எஸ்.பாபு நேற்று கொச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேரள ஊடக அகாடமியின் 40 ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய ஊடக விருது ஏற்படுத்தப்பட்டது. பத்திரிகைத் துறையில் துணிச்சலான மற்றும் தகுதிமிக்க பங்களிப்பு செய்வோருக்கு இவ்விருது வழங்கப்படும். அதன்படி, மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என். ராமுக்கு தேசிய ஊடக விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சமும், பாராட்டுப் பத்திரமும், நினைவுப் பரிசும் கொண்டது.
மாநில முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி, மூத்த பத்திரிகையாளர் தாமஸ் ஜேக்கப், பொதுக் கல்வித்துறை செயலாளர் ஷாஜஹான், ஊடக ஆய்வாளர் செபாஸ்டியன் பால், ஏசியாநெட் ஆசிரியர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மற்றும் திட்டக்குழு உறுப்பினர் மிருதுள் ஈப்பன் ஆகியோர் கொண்ட தேர்வுக் குழுவினர் தேசிய ஊடக விருதுக்கு ‘இந்து’ என்.ராமை தேர்வு செய்தனர்.
கடந்த 40 ஆண்டுகளாக பத்திரிகைத் துறைக்கு ஆற்றிவரும் பணிகளை கருத்தில் அவரை இந்த விருதுக்கு தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். கொச்சியில் வரும் மார்ச் மாதம் நடக்கும் ஊடக மாநாட்டில் ‘இந்து’ என்.ராமுக்கு தேசிய ஊடக விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்குவார்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாபு கூறினார்.