பெண்களுக்கு ஊசி போடும் மர்ம நபரால் பீதி: மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகம்

பெண்களுக்கு ஊசி போடும் மர்ம நபரால் பீதி: மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகம்
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பைக்கில் முகத்தை மூடியபடி வலம் வரும் மர்ம நபர் ஒருவர், பெண்களிடம் நைசாக பேசி, அவர்கள் ஏமாறும்போது ஊசி போட்டுவிட்டு தப்பிச் செல்வதால் பீதி ஏற்பட்டுள்ளது.அந்த மர்ம நபர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேற்கு கோதாவரி மாவட்டம் கோரகலமூடி கிராமத்தில் நேற்று அதிகாலையில் வீட்டுக்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார் நாககுமாரி (25). அப்போது, அந்த வழியாக கைக்குட்டையால் முகத்தை மூடியபடி பைக்கில் வந்த ஒரு மர்ம நபர், திடீரென தன்னிடமிருந்த ஊசி மூலம் அந்தப் பெண்ணுக்கு மருந்தை செலுத்தி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி விட்டான்.

இதனால் பயந்து போன நாககுமாரி அலறியதைக் கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடி வந்தனர். பின்னர் நடந்ததைக் கூறினார். இதுதொடர்பாக பாலகோடேரு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். நாககுமாரியை மருத்துவ சோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதேபோல கடந்த சனிக்கிழமை மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் பள்ளி முடிந்து மாலையில் தங்களது வீட்டுக்கு நடந்துசென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த ஒருவர் அந்த மாணவிகளிடம் முகவரி கேட்டுள்ளார். மாணவிகள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த மர்ம நபர், தான் கொண்டு வந்த ஊசியை இருவருக்கும் செலுத்திவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களது பெற்றோர் இருவரையும் அருகில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் உண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் அனைவரது ரத்தமும் பரிசோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான், எந்த விவரமும் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். செலுத்தப்பட்ட ஊசியில் வெள்ளை நிறத்தில் மருந்து இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறி இருப்பதால், இது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் இல்லை என போலீஸார் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in