Last Updated : 23 Jan, 2020 09:48 PM

 

Published : 23 Jan 2020 09:48 PM
Last Updated : 23 Jan 2020 09:48 PM

மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் எப்போதும் முறையிட்டுக் கொண்டே இருக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் தண்டனையை எதிர்த்து எப்போதும் நீதிமன்றத்தில் முறையிட்டுக் கொண்டே இருக்க முடியாது, அதற்கான திறந்த வாய்ப்பை வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் இம்மாதம் 22-ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் கருணை மனு, மற்றும் சீராய்வு மனு என ஒவ்வொரு குற்றவாளியும் ஒருவர் பின் ஒருவராகத் தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவது பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை மறைமுகமாகக் குறிப்பிட்டு இந்த கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

கடந்த 2008-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணும், அவரின் ஆண் நண்பரும் சேர்ந்து தங்களின் குடும்பத்தில் உள்ள 7 பேரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இதில் அந்த பெண்ணின் பெற்றோர், அவரின் இரு சகோதரர்கள், காதலரின் மனைவி, 10 மாத குழந்தை ஆகியோர் அடங்கும். இந்த வழக்கில் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துக் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றமும் அப்போது உறுதி செய்தது.

இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது

உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுதார்கள் மனுவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். "குற்றவாளிகள் தங்களின் பெற்றோர் குடும்பத்தினரை இரக்கமின்றி கொலை செய்துவிட்டு, தற்போது நான் அனாதையாகிவிட்டேன் எனக்கூறி கருணை கோர முடியாது. இந்த மனுவை ஏற்றால் மரண தண்டனையே தேவையில்லாமல் போய்விடும்" எனத் தெரிவித்தார்

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர், மீனாட்சி அரோரா ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் வாதிடுகையில், " குற்றவாளிகள் இருவரும் முதல்முறையாகக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள், அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பளித்து தண்டனையைக் குறைக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு கூறுகையில்,

" தண்டனை வழங்கப்பட்ட ஒரு குற்றவாளி தனது மரண தண்டனைக்கு எதிராக எப்போதுமே முறையீட்டுக் கொண்டேவும், கேள்விக்கு உள்ளாக்கிக் கொண்டேவும் இருக்க முடியாது. மரண தண்டனை என்பது முடிவில்லாதது அல்ல முடிவை எட்டக்கூடியது.மரண தண்டனை திறந்த முனை அல்ல.

நீதிபதி என்பது குற்றத்தை மன்னிக்கக் கூடியவர் அல்ல. நீதிபதியின் அடிப்படை கடமை என்னவென்றால், குற்றத்துக்கு ஏற்றார்போல் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்வதுதான். குற்றவாளி முதல்முறையாகத் தவறு செய்துள்ளாரா அல்லது கடினமான குற்றம் செய்தவரா என்பது அல்ல.

ஒவ்வொரு கிரிமினல் குற்றவாளியும் தாங்கள் அப்பாவிகள் இரக்கமான இதயம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், நாங்கள் அவர்கள் செய்த குற்றத்தையும் கருத வேண்டியுள்ளது.குற்றம் செய்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கும். குற்றவாளியின் தண்டனை முடிவு செய்வது சட்டம்தானேத் தவிர நீதிபதி அல்ல.

சட்டமும், நீதிபதியும் சமூகத்துக்காகப் பணி செய்கிறார்கள். நீதிபதியும் சாதாரண மனிதர்தான், அவரால் ஒரு கொலையை மன்னிக்க முடியாது. ஒரு விஷயத்தைக் கற்பனை செய்துபாருங்கள், ஒரு கொலைக்குற்றவாளியிடம் நீதிபதி, நான் உங்களை மன்னித்துவிட்டேன் என்று கூறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள்.

குற்றவாளிகளுக்குச் சீராய்வு மனுத்தாக்கல் செய்யும் வாய்ப்பு மிகவும் வரம்புக்கு உட்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் ஏதேனும் பிழை இருந்தால் அதைச் சுட்டிக்காட்டலாம்" எனத் தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x