Last Updated : 23 Jan, 2020 08:50 PM

 

Published : 23 Jan 2020 08:50 PM
Last Updated : 23 Jan 2020 08:50 PM

தூக்குத் தண்டனைக்கு முன் பெற்றோர்களை கடைசியாக சந்திக்க விரும்புகிறார்களா? - நிர்பயா குற்றவாளிகள் மவுனம்

பிப்.1ம் தேதி தூக்கிலிடப்படவுள்ள நிர்பயா பாலியல் பலாத்கார மரண தண்டனைக் குற்றவாளிகள் நால்வரும் தங்கள் பெற்றோரை, குடும்பத்தினரை கடைசியாக ஒரு முறை சந்திப்பது பற்றி எதுவும் கூறாமல் மவுனம் சாதித்து வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றவாளிகளான வினய் ஷர்மா, அக்‌ஷய் குமார் சிங், முகேஷ் குமார் சிங், பவன் குப்தா ஆகியோர் தனித்தனியே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை எண்3-ல்தான் இவர்களுக்கு தூக்கு நிறைவேற்றப்பட உள்ளது. பிப்ரவை 1ம் தேதி காலை 6 மணியளவில் இவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

“மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் குடும்பத்தினர, பெற்றோரை எப்போது கடைசியாக சந்திக்கப் போகிறீர்கள் என்று கேட்டோம் ஆனால் அவர்கள் பதில் அளிக்காமல் மவுனம் காத்தனர்” என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தங்களிடம் இருக்கும் சொத்து, பணம் ஆகியவற்றிற்கு உரித்தவர் யார் என்ற உயில் எழுத விரும்புகிறீர்களா என்றும் கேட்டுள்ளனர், ஆனால் அதற்கும் பதில் தரவில்லை.

“தூக்குக் குற்றவாளிகளான இந்த 4 பேரையும் அவர்களது குடும்பத்தினர் வாரம் இருமுறை சந்திக்கலாம், ஆனால் கடைசி சந்திப்புக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவிலலி, காரணம் அவர்கள் இன்னும் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை” என்றார் அந்த அதிகாரி.

புதனன்று மத்திய அரசு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் உத்தரவுக்குப் பிறகு 7 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு செய்துள்ளது, அதாவது மரண தண்டனை குற்றவாளிகள் தண்டனை நிறைவேற்றத்தை தாமதப்படுத்த சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்துவதாக நிர்பாயா வழக்கை முன்னிட்டு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரத்தில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டு பார்க்கப்பட்டன.

குற்றவாளிகளின் உடல் எடையைக் கணக்கிட்டு அதற்கேற்றார் போல் உருவபொம்மைகளை அதே எடையில் உருவாக்கி தூக்குத் தண்டனையை சோதனை செய்து பார்த்தனர்.

மீரட்டிலிருந்து பவன் ஜலாத் என்பவர் இதற்காகவென்று வரவழைக்கப்பட்டு, இவர்தான் தூக்கிலிடும் வேலையைச் செய்யவிருக்கிறார். திஹார் அதிகாரிகள் 2 ஹேங்மேன்களைக் கேட்டு உ.பி. சிறை அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

நால்வருக்கும் ஒரே நேரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இவர்கள் நால்வரும் நல்ல ஆரோக்கியமான மனநிலையில் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய சிறை அதிகாரிகள் இவர்களுடன் தினசரி பேசி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x