

பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஏற்படும் தோல்வி பாஜகவுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனால், பிஹார் மாநிலத்திற்கு அக்கட்சித் தலைவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2018-ல் மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களாக சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்றிலும் பாஜகவிற்குத் தோல்வி கிடைத்தது. அடுத்து ஹரியாணாவில் தனி மெஜாரிட்டியுடன் இருந்த ஆட்சி, கூட்டணி ஆதரவு நிலைக்கும் தள்ளப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற மகராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டிலும் பாஜக தனது ஆட்சியை இழக்க நேரிட்டது. இந்நிலையில், டெல்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ல் நடைபெற உள்ளது.
இதையடுத்து பிஹாரிலும் இவ்வருடத்திற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். எனவே, இந்த சூழலில் பிஹாருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு உருவாகியுள்ளது. ஏனெனில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜகவிற்கு இன்னும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
இதைப் பெற மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவின் ஆட்சி அமைவது முக்கியம். குறிப்பாக, பிஹாரில் இந்த வருடம் மாநிலங்களவையின் ஐந்து உறுப்பினர்கள் பதவி காலாவதியாகிறது. 2022-ல் மேலும் ஐந்து உறுப்பினர்கள் பதவிகள் நிறைவடைகின்றன.
இதுபோல் பல்வேறு காரணங்களால், பிஹார்வாசிகள் தம் மாநிலத்திலும், தான் அதிகம் வசிக்கும் டெல்லியிலும் பாஜகவால் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளனர். மத்தியில் தம் தலைமையிலான ஆட்சியை இரண்டாவது முறை அமைத்த பாஜக, பிஹாரில் தனித்துப் போட்டியிட விரும்பியது.
இங்கு தனது ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திற்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கும் பேச்சும் எழுந்தது. இது தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் ஆட்சி இழப்பால் அமைதியானது.
அடுத்து பிஹாரின் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களுக்குள் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டி அறிக்கை மோதலும் கிளம்பியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சித் தலைவர் அமித் ஷா, 'பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் மீண்டும் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெறும்’என அறிவித்திருந்தார்.
இதன் பலன், நிதிஷ் குமாரின் கட்சிக்கு டெல்லி தேர்தலிலும் இடம் கிடைத்துள்ளது. இங்கும் தனது கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் பாஜக, நிதிஷுக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
இம்மாநிலத்தின் மற்றொரு கட்சியான மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்திக்கும் ஒரு தொகுதி அளித்துள்ளது. இதற்கு டெல்லியில் சுமார் 31 சதவீதமுள்ள பிஹார் மாநில வாக்காளர்களும் காரணம் ஆகும். இவர்கள் எண்ணிக்கை 2001-ல் 14 சதவிகிதம் மட்டும் இருந்ததது குறிப்பிடத்தக்கது.