

நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் 2012-ம் ஆண்டில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி சதீஸ் குமார் அரோரா தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
நிர்பாயாவின் தாயார் ஆஷாதேவி குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைந்து தண்டனை விதிக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்தவரும் நீதிபதி சதீஸ் அரோராதான் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் தூக்குத் தண்டனை ஜனவரி 22-ம் தேதி 7 மணிக்குள் நிறைவேற்றப்படும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு, சீராய்வு மனு ஆகியவற்றைத் தாக்கல் செய்ததையடுத்து, தண்டனை நிறைவேற்றும் தேதி பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி சதீஸ் குமார் அரோரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக அடுத்த ஒரு ஆண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு கடிதத்தை டெல்லி உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், பாட்டியாலாவில் மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்.
வரும் பிப்ரவரி 1-ம் தேதி குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பான வழக்குகள் அனைத்தும் இனிமேல் புதிய நீதிபதிக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது